UAE Tamil Web

கைவிட்ட ஏஜெண்ட்; ஒரே அறையில் தவித்த 49 இந்தியர்களுக்கு வேலை வாங்கிக்கொடுத்த தன்னார்வலர்..!

JOB (2)

இந்தியாவில் இருந்து வேலைக்காக அமீரகம் வந்து, ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு ஒரு படுக்கையறை கொண்ட பிளாட்டில் தவித்த இந்தியர்களை ஷிராளி ஷேக் முஸாபர் என்னும் தன்னார்வலர் மீட்டு, தாயகம் திரும்ப விரும்பியவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மீதியிருந்த 49 பேருக்கு வேலையும் வாங்கிக்கொடுத்துள்ளார்.

முஸாபர் மற்றும் அவரது நண்பர் ஹிதாயத் அதூர் ஆகியோர் தொழிலாளர்கள் விஷயத்தை ஊடகங்களிடம் தெரிவிக்க, அதன்மூலம் பாதிக்கப்பட்ட தொழிலார்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு உதவ 20 நிறுவனங்கள் முன்வந்தன. தொழிலார்களை அவர்களே வேலைக்கு எடுத்துக்கொள்வதாகவும் அறிவித்தனர்.

கர்நாடகா NRI அமைப்பின் தலைவரும் தொழிலதிபருமான பிரவீன்குமார் ஷெட்டி தனக்குச் சொந்தமான பார்ச்சூன் பிளாசா ஹோட்டலில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நேர்முகத்தேர்வை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கேயே தங்களுக்கு வேண்டிய தொழிலாளர்களை நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.

“பாதிக்கப்பட்டவர்களில் திறமையான தச்சர், கொத்தனார், ஏசி மெக்கானிக் ஆகியோர் இருந்தனர். இப்போது அவர்களுக்கு விசாவும் வேலையும் கிடைத்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் சுகாதாரமான தங்குமிடம் மற்றும் நிறுவனத்தின் சார்பில் உணவும் வழங்கப்பட உள்ளன” என முஸாபர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தொழிலார்கள் பற்றிய செய்தியை வெளியிட்ட கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த ஹிதாயத் அதூர் மேலும் பேசுகையில்,” இந்த செய்தி வெளிவந்த பின்னர் இதுபோலவே ஏஜெண்ட்களால் ஏமாற்றப்பட்டு வேலையில்லாமல் தவிக்கும் பலரும் எங்களைத் தொடர்புகொண்டுவருகின்றனர். இந்த 64 பேர் தவிர்த்து, இதுவரையில் 80 பேர் வேலை வேண்டி எங்களை அணுகியிருக்கிறார்கள். நீல மற்றும் வெள்ளைக் கழுத்துப்பட்டை தொழிலாளர்களும் இதில் அடங்குவர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் துயர்துடைக்க முன்வந்த 23 நிறுவனங்களுக்கும் நன்றி” என்றார்.

வேலைகிடைத்த தொழிலாளர்களில் ஒருவரான முகமது மொய்னுதீன் இதுகுறித்துப் பேசுகையில்,” முழுவதும் நம்பிக்கையிழந்து இருந்த எங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பை இந்தத் தன்னார்வலர்கள் வழங்கியிருக்கிறார்கள். ஊடகத்தின் மீதும் மானிடத்தின் மீதும் நம்பிக்கைகொள்ளலாம் என அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். எங்களைப்போல் கஷ்டப்படும் மக்கள் பலருக்கும் இவர்கள் உதவிவருகின்றனர்” என்றார்.

நாடுதிரும்ப விரும்பிய சந்தீப் ஷர்மா என்னும் தொழிலாளிக்கு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உதவியதன் அடிப்படையில் அவருக்கு இலவச விமான டிக்கெட் வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் பேசுகையில்,” நீண்ட நாட்கள் கழித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய குடும்பத்தைப் பார்க்கப் போகிறேன். ஏஜெண்ட்டால் ஏமாற்றப்பட்டு திக்கற்று நின்ற என்னை கரைசேர்த்த தன்னார்வலர்களுக்கு நன்றி. என்னைப்பொருத்தவரையில் அவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள். எனக்கு இலவசமாக விமான டிக்கெட் வழங்கிய துணைத் தூதரகத்திற்கும் நன்றி. கருணையின் மண்ணான அமீரகத்தினைச் சேர்ந்த அதிகாரிகள் என்மீது காட்டிய பரிவை என் வாழ்நாள் முழுவதும் நன்றியோடு நினைத்திருப்பேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.