UAE Tamil Web

எனக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசை சார்.. – 60 வயதில் டிகிரி.. அமீரகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த நபர்..!

AlRisi-60-year-old

படிப்பதற்கு வயது தடையில்லை தான். ஆனால் நாம் தினந்தோறும் சந்திப்பவர்களில் எத்தனை பேரால் இதை சாத்தியமாக்க முடிகிறது? படிப்பதற்கேற்ற வசதி, நேரம், சூழல் இருந்தாலும் ஏதோ பத்து பைசா காரணங்களுக்காக தங்களுடைய நெடுநாள் ஆசையை பலரும் இழப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், நான் அந்த ரகமல்ல என இந்த உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் 60 வயது ஏமிராட்டியான கலீஃபா அப்துல்லா சலீம் அல் ரிசி.

அல் அய்ன் பல்கலைக்கழகத்தில் அரபி மற்றும் இஸ்லாமிய கல்வியில் இளங்கலை பட்டம் வாங்கியிருக்கிறார் அல் ரிசி. தனக்கு படிப்பதற்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவிக்கும் ரிசி கடந்த 1986 ஆம் ஆண்டு ஆறாவது தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதன்பிறகு பள்ளி செல்லும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை.

இருப்பினும் வீட்டிலிருந்தே கல்வி கற்கத் துவங்கியிருக்கிறார் அல் ரிசி. கிண்டல்கள், கேலிகள் என தன்னை நோக்கி வீசப்பட்ட அனைத்தையும் தகர்த்தெறிந்து 2017-2018 ஆண்டில் 12 ஆம் வகுப்பையும் முடித்திருக்கிறார் அவர்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” சிறிய வயதில் குரானில் உள்ள அறிவியலை படித்தேன். பின்பு 16 வயதில் திருமணம். அப்புறம் குழந்தைகள். இருப்பினும் கல்வி மீது எனக்கிருந்த ஆசை குறையவே இல்லை. அரபி மற்று இஸ்லாமிய கல்வியில் இளங்கலை, முதுகலை மற்றும் டாக்டர் பட்டம் பெறவேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு. என்னைப்போன்ற வயதானவர்களும் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த ஆட்சியாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி” என்றார்.

தன்னுடைய இந்த கல்விப் பயணத்தில் தன்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்ததாகவும் அல் ரிசி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

“கல்வி என்பது குறிப்பிட்ட வயதுடைய நபர்களுக்கு மட்டுமானதல்ல” எனச் சொல்லும் அல் ரிசி விரைவில் டாக்டர் பட்டம் பெற UAE Tamil Web குழு வாழ்த்துகிறது.

AlRisi-60-year-old
2 Shares
Share via
Copy link