இந்தியா – அமீரகம் இடையேயான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தால் இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளின் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் “இந்தியா – அமீரகம் இடையேயான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புதிய தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு வணிகங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்று கூறினார்.
பொருளாதார கூட்டு ஒப்பந்தம், CEPA ஒரு சமநிலையான, நியாயமான, விரிவான மற்றும் சமமான கூட்டு ஒப்பந்தம் என்றும் இது இந்தியாவிற்கு பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டிலும் மேம்பட்ட சந்தை வசதியை வழங்கும் என்றும் கோயல் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை வழங்கும் என்றும், இதன் மூலம் வர்த்தகப் போட்டியும், பொருளாதார வளர்ச்சியும் பெருகும் என்று கூறினார்.
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு 88 நாட்களில் கையெழுத்தாகி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பியூஷ் கோயல், மே மாதத் தொடக்கத்தில் அதாவது 90 நாட்களுக்குள் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று கூறினார்.
“ஒப்பந்தத்தை அமல்படுத்துவதன் மூலம் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் 90% தயாரிப்புப் பொருட்களும், 80% வர்த்தகம் பூஜ்ஜிய வரியை ஈர்க்கும்’’ என்றார்.