UAE Tamil Web

“ரொம்ப நாள் கனவு அது” – 9 வயது சிறுவனை ஒருநாள் போலீசாக நியமித்த துபாய் காவல்துறை..!

alkaabi

துபாய் காவல்துறையில் இணையவேண்டும் என்ற கனவோடு இருந்த 9 வயது சிறுவன் சவுத் அகமது சலீம் அல்காபிக்கு துபாய் காவல்துறை இன்ப அதிர்ச்சி ஒன்றினை அளித்திருக்கிறது. ஒருநாள் போலீசாக அல்காபியை நிர்ணயித்து அவனை காவல்துறை தலைமையகத்திற்கு போலீஸ் காரில் அழைத்துச் சென்றிருக்கிறது காவல்துறை.

நிஜமான கதை

அமீரக இலக்கிய அறக்கட்டளை (Emirates Literature Foundation) மத்திய கிழக்கிற்கான வாய்சஸ் ஆஃப் ஃபியூச்சர் ஜெனரேஷன்ஸ் (Voices of Future Generations) என்னும் அமைப்பை ஒருங்கிணைக்கிறது. எதிர்கால தலைமுறை நம்பிக்கையுடனும் அறத்துடனும் விளங்கும் நோக்கில் சிறுவர் சிறுமியரை கதைகளை எழுதச் செய்வதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

அப்படி அல்காபி எழுதிய கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அவன் வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறான். வளைகுடா பிராந்தியத்திற்கான அமீரக இலக்கிய அறக்கட்டளையின் நல்லெண்ணத் தூதர் ஷேக் ஹிஸ்ஸா பின்ட் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அல்காபி எழுதிய கதையைப் படித்து அசந்துபோயிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” அல்காபியை குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். தாக்குதலுக்கு உட்படுத்தப்படும் அவனது நண்பனை மீட்பது பற்றிய அந்தக் கதை அபாரமான ஒன்றாகும். அநீதிக்கும் அசமத்துவத்திற்கும் எதிரான அவனது நிலைப்பாடு பாராட்டப்படவேண்டிய ஒன்று” என்றார்.

அவனுடைய ஆசையை அறிந்து அதனைப்பூர்த்தி செய்து, நம்பிக்கைக்குரிய ஒரு எதிர்காலத்தின் பிரதிநிதியை ஒருநாள் காவல்துறை அதிகாரியாக வாய்ப்பளித்த துபாய் காவல்துறைக்கு தான நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

துபாய் காவல்துறையின் சமூக மகிழ்ச்சி பொதுத்துறையின் தற்காலிக இயக்குனர் கர்னல் அலி கால்ஃபான் அல் மன்சூரி இதுகுறித்துப் பேசுகையில்,” ஒரு நல்ல குடிமகன் எப்படி இருக்கவேண்டும் என்பதனை அல்காபி தனது கதையின் மூலம் வரையறுக்கிறான். பிறருக்கு உதவி செய்தல், பூங்காக்களை அமைத்தல், உள்ளூர் தொழில்களுக்கு தன்னார்வலராக செயல்படுதல் போன்ற அவனது கருத்துகள் நம்பிக்கையான எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும் காரணிகளாகும். உரிய வயதை எட்டுகையில் அல்காபி நிச்சயம் சாதிப்பான்” என்றார்.

9 வயது சிறுவனின் ஆசையைப் பூர்த்தி செய்த துபாய் காவல்துறைக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

alkaabi
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap