ரமலான் மாதத்தில் அமீரக மக்களிடம் 40 ஆயிரம் திர்ஹம்ஸ் வரை பிச்சை எடுத்து சம்பாதித்த பிச்சைக்காரரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலிஸாரின் கூறுகையில், ரமலான் மாதம் துவங்கி 9 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், பிச்சைக்காரர் ஒருவர் அமீரகத்தின் நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.
முன்னதாக கடந்த வாரம் மார்ச் 18 முதல் ரமலான் முதல் நாள் வரை 178 பிச்சைக்காரர்களை கைது செய்ததாக போலிஸார் தெரிவித்திருந்தது.
“இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர், தங்கள் சட்டவிரோத நடத்தையை நியாயப்படுத்தி வருகின்றனர். பிச்சை எடுப்பதற்கு எதிரான மத்திய சட்ட எண். 9 இன் 2018 இன் படி, இது சட்ட விரோதம் மற்றும் தண்டனைக்குரியது” என்று எதிர்ப்பு நடவடிக்கை இயக்குனரான அஹ்மத் அல் அடிடி எச்சரித்தார்.
“பிச்சைக்காரர்களை தொழில்முறைக்கு செயல்படுத்தும் கும்பல் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஆட்களை அமீரகத்திற்கு அழைத்து பிச்சை எடுக்க வைப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும்” என்று அல் அதிடி தெரிவித்திருந்தார்.
பிச்சை எடுப்பவர்களை கண்டால் துபாய் காவல்துறை செயலி மூலம் 901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போது ரமலான் என்பதால் பிச்சை எடுப்பது போன்ற மோசடி சம்பவங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல்கள், வாட்ஸ் அப் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலம் பிச்சை என்னும் பெயரில் மோசடி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற விதிமீறல்களில் ஈடுப்படுவோருக்கு எதிராக இ-கிரைம் (www.ecrime.ae) என்ற இணைய தளத்தில் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.