உலகின் மிகச்சிறந்த காவல்துறைகளுள் அமீரக காவல்துறையும் ஒன்றாகும். குடிமக்கள், குடியிருப்பாளர்கள், சுற்றுலாவாசிகள் என பேதமின்றி அனைவரிடத்திலும் கனிவுடன் நடந்துகொள்வது இவர்களது வழக்கம்.
அதற்கு மேலும் ஓர் உதரணமாக நடைபெற்றிருக்கிறது இந்தச் சம்பவம். துபாயில் வசித்துவரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தாய் ஷரோன் பரில்லா தனது இரண்டு வயது மகன் செப் -உடன் வெளியே சென்றிருக்கிறார்.
சாலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்த செப், துபாய் காவல்துறை வாகனம் செல்வதைப் பார்த்ததும் குஷியாகி கைகளை ஆட்ட அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
கைகளை ஆட்டும் செப்பை, காவல்துறை அதிகாரிகளும் பார்த்திருக்கிறார்கள். ஆகவே, வாகனத்தை நிறுத்திவிட்டு செப் -இடம் வந்த அதிகாரிகள் அவனை தேரா காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.
தந்தை ரூடி, தாய் பரில்லா மற்றும் செப் ஆகியோர் காவல்நிலையத்திற்கு வருகை தர, சிறுவன் செப்பிற்கு இனிப்புகள், போலீஸ் கார் பொம்மைகள் ஆகியவற்றை காவல்துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
காவல்நிலையத்தில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டுப் பிரிவில் செப் -உடன் காவல்துறை அதிகாரிகளும் விளையாண்டனர். இதுகுறித்துப் பேசிய பரில்லா,” காவல்துறை உங்களது நண்பன் என்பது துபாய் காவல்துறைக்கு மிகவும் பொருந்தும். பரபரப்பாக இயங்கும் அவர்களது நேரத்திற்கு மத்தியில் என் மகனின் சின்னஞ்சிறு ஆசையையும் தீர்க்க அவர்கள் தவறவில்லை என்பது என்னை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. எனது மகனுக்கு போலீஸ், தீயணைப்பு வீரர்கள் குறித்த படங்கள் மிகவும் பிடிக்கும். அதனாலேயே அன்று காவல்துறைக்கு கை காட்டியிருக்கிறான்” என்றார்.
