துபாயில் ஏ.ஆர். ரஹ்மான் தனது இசைக் அரங்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்துச்சென்று அவர் தயாரித்துள்ள ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை காண்பித்தார்.
இதனை கண்டு ரசித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
துபாய் EXPO 2020 கணகாட்சியில் தமிழ்நாட்டு அரங்கைத் தொடங்கிவைத்த மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, 4 நாள் பயணமாக துபாய் சென்றுள்ள திரு ஸ்டாலின், ‘துபாய் EXPO 2020’ கண்காட்சியில் பங்கேற்றார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய அமீரக அரசின் இந்த பயணம் உதவும் என்ற நம்பிக்கை, அந்நாட்டு அமைச்சர்களுடனான சந்திப்பில் வலுப்பெற்றுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் துபாயில் உள்ள தனது இசை அரங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அங்கு முதல்வர் சென்றார். அப்போது ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற ஆல்பத்தை முதல்வருக்கு திரையிட்டுக் காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.