உக்ரைன் அணியின் முன்னாள் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி கடந்த மாதம் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் தனது ஓய்வு முடிவை அறிவித்த பிறகு தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக துபாய் வந்துள்ளார்.
இவர் குடும்பத்துடன் துபாயில் இருந்த போது உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது.
போர் தொடங்கியதற்கு பிறகு இவர் தனது மனைவி மற்றும் மூன்று இளம் குழந்தைகளுடன் ஹங்கேரி நாட்டுக்கு திரும்பியுள்ளார். பின்னர் தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இவர் உக்ரைன் திரும்பியுள்ளார்.
இதனையடுத்து உக்ரைன் நாட்டின் கீவ் நகரை பாதுகாக்கும் ராணுவப் பாதுகாப்புக் குழுவில் இணைந்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த அவர், “நான் இந்த நாட்டில் தான் பிறந்தேன், என் தாத்தா பாட்டி இங்கே தான் புதைக்கப்பட்டுள்ளனர், என் குழந்தைகளுக்கு என்னை பற்றி சொல்ல ஒரு வரலாற்றை உருவாக்க விரும்புகிறேன். எங்கள் நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் உள்ளது. ரஷ்யா எங்கள் நாட்டின் மீது போர்தொடுத்துள்ளதை யாரும் விரும்பவில்லை. எங்கள் நாட்டில் வறுமையை கொண்டுவரவே ரஷ்யா விரும்புகிறது.
எனக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். நான் எனது வீட்டில் இருந்திருந்தால், எனது சொந்த நாடான உக்ரைனுக்கு திரும்பி வரவில்லை என்ற குற்ற உணர்வு எப்போதும் இருக்கும்.
இப்பொது நான் உக்ரைன் வந்துவிட்டேன். ஆனால் எனது குடும்பத்தினரை விட்டுவிட்டு வந்த குற்ற உணர்வை உணர்கிறேன்” என்றார்.
