பீக் ஹவர் எனப்படும் நெரிசல் அதிகமிருக்கும் நேரங்களில் மக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக 244 புதிய பேருந்து ட்ரிப்களை அறிமுகம் செய்வதாக அபுதாபி நகராட்சியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்திருக்கிறது.
102, 41, 67, 101, 110, 160 மற்றும் 170 ஆகிய அதிக நெரிசல் மிகுந்த வழித்தடங்கள் வாயிலாக இந்தப் புதிய பேருந்து சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதன்மூலம் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பேருந்தை மக்களால் பயன்படுத்த முடியும்.
சுல்தான் பின் சயீத் தெரு (மூரூர் சாலை), சயீத் முதல் தெரு (எலக்ட்ரா தெரு), ஹம்தான் தெரு, முஷ்ரிப் மால், வஹ்தா மால், தல்மா மால், மஸ்யத் மால், கலீஃபா சிட்டி சூக், அல் ரீம் தீவு, அல் ஜீனா மற்றும் முசாஃபா ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் இனி நெரிசலின்றி தங்களது பயணத்தைத் தொடர முடியும்.
இதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்து புதிதாக வாங்கப்பட்டுள்ள பென்ஸ் மற்றும் வால்வோ பேருந்துகள் குறைவான அளவில் கார்பனை வெளியேற்றும் சிறப்பு வாய்ந்தவை. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு பெருமளவில் குறைக்கப்படும்.
பயணிகள் எளிதாக பேருந்து சேவைகளைப் பெறும் நோக்கில் ITC சமீபத்தில் கூகுள் மேப்புடன் அபுதாபி பேருந்து சேவை விபரங்களை ஒன்றிணைத்திருந்தது. கூகுள் மேப்ஸ், ஹியர் மேப்ஸ், டாம்டாம் நேவிகேஷன் ஆப் ஆகியவை மூலமாக பேருந்து இயக்கப்படும் நேரம், தூரம் ஆகியவற்றை மக்கள் தெரிந்துகொள்ளலாம்.
பயணிகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்கவேண்டும் எனவும் ITC வலியுறுத்தியுள்ளது.
View this post on Instagram