UAE Tamil Web

குறைவான குற்றவியல் சம்பவங்களின் அடிப்படையில் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியீடு – முதலிடத்தில் அபுதாபி..!

abudhabi

மிகக்குறைவான குற்றவியல் சம்பவங்கள் நடைபெறுதன் அடிப்படையில் உலகின் டாப் 10 பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை நும்பியோ இணையதளம் (Numbeo) வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், ஐந்தாவது முறையாக அபுதாபி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. துபாய் மற்றும் ஷார்ஜா ஆகியவையும் டாப் 10 ல் இடம்பெற்றுள்ளன.

- Advertisment -

431 நகரங்களை பின்னுக்குத்தள்ளி வாழ்க்கைத் தரக் குறியீட்டில் (Quality of Life index) 88.46 சதவிகிதம் பாதுகாப்பானது என அபுதாபி அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள ஷார்ஜா 83.59 சதவிகிதமும் அதனைத் தொடர்ந்துள்ள துபாய் 83.44 சதவிதமும் பெற்றுள்ளன.

டாப் 10 ல் இடம்பெற்றுள்ள பிற நகரங்கள்: தோஹா, தைபை, க்யூபெக் சிட்டி, ஜூரிச், க்ளஜ் நெபோகா, மஸ்கட்.

இதுகுறித்துப் பேசிய அபுதாபி காவல்துறையின் தலைமைத் தளபதியான கலாஃப் அல் மஸ்ரோயி (Khalaf Al Mazrouei),” இந்த கணக்கெடுப்பு முடிவுகள் அமீரகம் எத்தகைய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு சான்று. அபுதாபி 11.54 என்னும் குறைவான குற்றக் குறியீட்டைப் (lowest crime index) பெற்றிருக்கிறது. வாழ்வதற்கும், முதலீடு செய்வதற்கும், பணிபுரியவும், விசிட்டிங் விசாவில் வரவும் அபுதாபி சிறந்த நகரம் என்பது இதன்மூலம் புலனாகிறது. நம்முடைய தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது. பாதுகாப்பு வழிமுறைகளையும் நாட்டின் நிலைத்தன்மையை கட்டியெழுப்ப பாடுபட்ட தலைவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வை மேலும் வலுப்படுத்தவும், உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் தொடர்ந்து முதலிடம் வகிக்க, வேண்டிய முயற்சிகளை எடுக்க தயாராக இருப்பதாக மஸ்ரோயி தெரிவித்தார்.

பாதுகாப்பு விஷயங்களில் உலகளாவிய முன்னோடிகளின் பாதையில் அபுதாபி காவல்துறை உறுதியோடு நடைபோடுவதாக அவர் குறிப்பிட்டார்.