UAE Tamil Web

பசியில்வாடும் மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு அபுதாபி இஸ்லாமிய வங்கி 10 லட்சம் திர்ஹம்ஸ் நிதியுதவி..!

WAM-ONE-MILLION-MEALS

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி 100 Million Meals என்னும் மிகப்பெரிய உணவு வழங்கும் திட்டத்தைத் துவங்கிவைத்தார். இதன்மூலமாக ரமலான் காலத்தில் 30 நாடுகளில் பசியில் வாடும் மக்களுக்கு உணவு வழங்க இருக்கிறது அமீரக அரசு. இந்தத் திட்டத்திற்கு லூலூ குழுமத்தின் தலைவர் யூசப் அலி சமீபத்தில் 10 மில்லியன் திர்ஹம்ஸ் நிதியுதவி அளித்தார்.

இதேபோல, பல்வேறு தனிநபர்களும் நிறுவனங்களும் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளித்துவருகின்றன. இதன் நீட்சியாக அபுதாபி இஸ்லாமிய வங்கி (ADIB) இந்த உணவு வழங்கும் திட்டத்திற்கு 10 மில்லியன் திர்ஹம்ஸ் நிதியுதவி அளித்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய ADIB வங்கியின் அபுதாபி பகுதி மேலாளர் ஹசன் அப்துல்லா அல் ஷம்சி,” 100 Million Meals திட்டத்திலும், கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவதிலும் அங்கமாக இருக்கும் ADIB யில் பணியாற்றுவதற்குப் பெருமைகொள்கிறோம். முகமது பின் ரஷீத் உலகளாவிய திட்டங்கள் (MBRGI) மூலமாக உலகம் முழுவதிலும் பரவியுள்ள பசிப் பிணிக்கு எதிராக நிகழ்த்தப்படும் போரில் அங்கம் வகிப்பது எங்களைப் பெருமைகொள்ளச் செய்கிறது. இத்திட்டத்தின்மூலம் 30 நாடுகளில் பசியோடு இருப்பவர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுவருகிறது. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையின் மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் அமீரக அரசின் நோக்கத்திற்கு பக்கபலமாக ADIB இருக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்” என்றார்.

இந்தத் திட்டம் மூலமாக அரபு தேசங்கள், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் தென்னமெரிக்கா ஆகிய நாடுகளில் பசியால் வாடும் மக்கள் பலனடைய இருக்கிறார்கள்.

நிதியுதவி அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு

100 Million Meals திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க நான்கு வழிகள் உள்ளன. அவை, திட்டத்தின் இணையதளம், குறுஞ்செய்தி வாயிலாக, வங்கிப் பணப் பரிமாற்றம் மற்றும் கால் செண்டர்.

அமீரகத்திற்கு உள்ளே மற்றும் வெளியே இருப்பவர்களும் www.100millionmeals.ae என்ற இணையதளம் மூலமாக நிதியளிக்கலாம். அல்லது இந்தத் திட்டத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கிக் கணக்கு எண் AE080240001520977815201 க்கு பணப் பரிமாற்றம் செய்யலாம்.

உள்ளூர் மக்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிற்கு தங்களது எதிசலாட் அல்லது டூ சிம் கார்டில் இருந்து Meal என்று குறுஞ்செய்தி அனுப்பலாம். பெரும் தொகைகளை நிதியாக அளிக்க விரும்பினால் இத்திட்டத்தின் ஊழியர்களை 8004999 என்ற எண்ணில் அழைக்கவும்.

WAM-ONE-MILLION-MEALS
0 Shares
Share via
Copy link