fbpx
UAE Tamil Web

அபுதாபி : கொரோனா தடுப்பு மருந்து சோதனை – பங்கேற்க விரும்புபவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யலாம்..!

covid-19-vaccine_

உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா தடுப்பு மருந்திற்கான சோதனைகளை மூன்று கட்டங்களாக அறிவித்திருந்தது. முதல் இரண்டு சோதனை கட்டங்களும் சீனாவில் வெற்றிகரமாக நடந்துமுடிந்ததைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பு மருந்து சோதனையின் மூன்றாவது கட்டம் நேற்று அமீரக தலைநகரமான அபுதாபியில் துவங்கியுள்ளது. இதுபற்றி விரிவாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இந்த சோதனை மருந்தானது முதன்முதலில் அபுதாபி சுகாதாரத்துறை தலைவரான ஷேக் அப்துல்லா பின் முகமது அல் ஹமீது (Sheikh Abdullah bin Mohammed Al Hamed) அவர்களுக்கு இன்று காலை செலுத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து சுகாதாரத்துறையின் துணை செயலாளர் டாக்டர் ஜமால் அல் காபிக்கு (Jamal Al Kaabi) சோதனை மருந்தானது செலுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் பங்கேற்க விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இளையதள முகவரி விரைவில் வெளியிடப்படும் என நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த சோதனை முயற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 4humanity.ae இந்த இணையதளத்திற்குச் சென்று தங்களது தகவல்களை உள்ளீடு செய்து பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இச்சோதனை பற்றி மேலதிக தகவல்களைப் பெற மற்றும் தங்களது சந்தேகங்களை நிவர்த்திசெய்துகொள்ள 02 8191111 என்னும் சிறப்பு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

18 – 60 வயதிற்குட்பட்ட அபுதாபி மற்றும் அல் அய்னில் வசிக்கும் எந்த நாட்டினைச் சேர்ந்தவரும் இந்த சோதனையில் பங்குபெறலாம். உங்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் முடிந்தவுடன் நீங்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இதில் கலந்துகொள்ளும் தன்னார்வலர்கள் ஆரோக்கியமாகவும், நெடுநாள் நோயாளிகளாக இல்லாமலும், முன்னர் கொரோனாவால் பாதிக்கப்படாதவராகவும் இருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.