21.9 C
Dubai
October 31, 2020
UAE Tamil Web

அபுதாபி காவல்துறை புதிய போக்குவரத்து கேமராக்களை அறிமுகப்படுத்தியுள்ளது..!

அபுதாபி காவல்துறையினர் புதிய போக்குவரத்து கேமரா அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த புதிய கேமரா ஜனவரி 15ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய கேமராக்கள், இரு கார்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரம் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, இணங்காதவர்களுக்கு எச்சரிக்கையை அனுப்பும் திறன் கொண்டது.

இதில் முதல் குற்றத்திற்கு, பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்குமாறு எச்சரிக்கும் குறுஞ்செய்தியை ஓட்டுநர்கள் பெறுவார்கள். மேலும் குற்றம் தொடர்ந்தால், ஓட்டுநர்களுக்கு 400 திர்கம் (Dhs400) அபராதம் மற்றும் நான்கு கருப்பு புள்ளிகள் (black points) வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குனர் கூறுகையில், ஓட்டுநர்கள் மற்றும் மற்ற சாலை உபயோகிப்போர்களை கடுமையான போக்குவரத்து விபத்துக்களிலிருந்து பாதுகாப்பதும், மேலும் அதன் விளைவாக ஏற்படும் மனித மற்றும் பொருள் இழப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நடவடிக்கைக்கான காரணம் என்று மேற்கோள் காட்டினார்.

இடைவெளியை எப்படி கணிப்பது?

இந்த புதிய போக்குவரத்து கேமராக்கள் எவ்வளவு தூரம் அனுமதிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஒரு மணி நேரத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் நாம் பயணிக்கும்போது, ​​உங்களுக்கும், உங்கள் முன் செல்லும் காருக்கும் இடையில் 56 மீட்டர் இடைவெளி விட்டுச் செல்ல பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும், முன்னால் உள்ள கார் திடீரென நிறுத்தப்பட்டால், விபத்து ஏற்படாமல் செயல்பட உங்களுக்கு போதுமான இடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



error: Alert: Content is protected !!