UAE Tamil Web

சீலிங் இடிந்து விழுந்ததால் காயமடைந்த பெண் வாடகைதாரர்.! உரிமையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு.. நஷ்ட ஈடு கிடைத்ததா?

abudhabi

அபுதாபியில் அபார்ட்மெண்ட்டில் வாடகைக்கு குடியிருந்த பெண் மீது வீட்டு சீலிங்கின் ஒரு பகுதி திடீரென இடிந்து மேலே விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் அப்பெண் காயமடைந்தார்.

- Advertisment -

இதனை அடுத்து சீலிங் உடைந்து விழுந்து தான் காயமுற்றதால் தனக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 155,000 திர்ஹம்ஸ் இழப்பீடு கோரி, அரபு பெண்ணான  நில உரிமையாளருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் வாடகைதாரர் வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் அந்த பெண் தாக்கல் செய்த மனுவில், ‘சீலிங் இடிந்து என் மேலே விழுந்ததில் நான் மோசமாக தாக்கப்பட்டேன். இதனால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்’என்று கூறி இருந்தார்.

இந்த சம்பவத்தின் விளைவாக அவரது இடுப்பு, முழங்கால்கள் மற்றும் அவரது உடலின் பிற பகுதிகளுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை எடுத்த மருத்துவ அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

மேலும் கட்டிடத்தை பழுதுபார்ப்பதற்கான தனது கடமையை நில உரிமையாளர் சரிவர செய்யாதது இந்த விபத்து ஏற்பட காரணமாக இருந்தது என்று குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார்களை நில உரிமையாளர் மறுத்தார். இது ஒரு சிறிய சம்பவம் என்றும் அந்த பெண்ணுக்கு சிறு காயங்களே ஏற்பட்டதாகவும், தன் மீது தவறு இல்லை என்றும் வலியுறுத்தி கூறினார்.

இந்த வழக்கில் வாதிட்ட நில உரிமையாளரின் வழக்கறிஞர், இரண்டாவது மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவத்திற்கு முன் அந்தப் பெண் ஏற்கனவே காயங்களால் அவதிப்பட்டார் என்றும், சீலிங் விழுந்ததால் ஏற்பட்ட காயங்களாக விபத்துதான் இதை இணைக்க முடியாது என்றும் வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த முதல் நிகழ்வு அபுதாபி நீதிமன்றம், இந்த வழக்கை தகுதி மற்றும் போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்தது. எனினும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் முதலில் வழங்கப்பட தீர்ப்பை ரத்து செய்து, வீட்டு உரிமையாளர் மீது தவறு இருப்பதாக கூறியது. நில உரிமையாளர் தனது வீட்டை முறையாக பராமரிக்காததால் அல்லது பழுது பார்க்காததால் தான் சீலிங் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன,

எனவே பாதிக்கப்பட்ட பெண் வாடகைதாரருக்கு,10,000 திர்ஹம்ஸ் இழப்பீடும், அப்பெண்ணின் வழக்கு செலவுகளை செலுத்தவும் வீட்டு உரிமையாளரான அரபு பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.