UAE Tamil Web

அபுதாபிக்குள் நுழைய அறிவிக்கப்பட்ட விதியில் மீண்டும் மாற்றம்.!

abudhabi

அமீரக தலைநகர் அபுதாபிக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகள் சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமீரகத்திற்குள் நுழைய, அபுதாபி தனது கோவிட் -19 சோதனை விதிமுறையை தற்போது மீண்டும் புதுப்பித்துள்ளது.

அதன்படி இன்று முதல் (ஜனவரி 17, 2020), குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பி.சி.ஆர்(PCR) ஸ்வாப் டெஸ்ட் அல்லது டி.பி.ஐ லேசர் டெஸ்ட்(DPI laser test) இவற்றில் ஏதாவது ஒரு சோதனையின் நெகட்டிவ் முடிவைப் பெற்ற 48 மணி நேரத்திற்குள், அதனை காட்டி அபுதாபிக்குள் நுழையலாம் என்று அறிவிக்கப்பட்டுளது.

அதே போல அபுதாபிக்குள் நுழைந்த நான்காவது நாளில் PCR சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அபுதாபியில் தொடர்ந்து 8 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்கியிருக்கும் போது, அபுதாபிக்குள் நுழைந்த எட்டாவது நாளில் மற்றுமொரு PCR சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அபுதாபிக்குள் நுழையும் நாளானது முதல் நாளாக கணக்கில் கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நுழைவு சோதனைகளில் இருந்து கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் 3ம் கட்ட மருத்துவ சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களில், அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் E அல்லது கோல்ட் ஸ்டார் (Letter ‘E’ or Gold Star) பெற்றவர்கள் தவிர அபுதாபி குடியிருப்பாளர்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கான ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைத் தொடருமாறு சமூக உறுப்பினர்களை பேரிடர் மேலாண்மைக் குழு வலியுறுத்தியுள்ளது. அரசு அறிவித்திருக்கும் இந்த நடைமுறைகளைப் பின்பற்றத் தவறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது நினைவுகூறத்தக்கது.

abudhabi
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap