UAE Tamil Web

அரிய வகை கட்டியால் அவதிப்பட்ட சிறுவன்.. கை விரித்த பல மருத்துவமனைகள்.! 6 மணி நேரம் ஆப்பரேஷன் செய்து சாதித்து காட்டிய அபுதாபி மருத்துவர்கள்..

clinic

15 வயதான முபாரக் அல்மென்ஹாலி என்ற எமிராட்டி சிறுவன் ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனைகள் முதல் அதிக வியர்வை, தலைவலி போன்ற பல நாட்பட்ட உடல்நலம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

- Advertisment -

மேற்கண்ட அனைத்து பிரச்னைகளுக்கும் அவரது உடலில் இருந்த அரிய வகை கட்டி காரணமாக கூறப்பட்டது. சிறுவன் முபாரக் தனது பெற்றோருடன் சேர்ந்து இந்தியா உட்பட பல மருத்துவமனைகளுக்கு சென்றும் தனக்கான உரிய சிகிச்சையை கண்டறிய முடியவில்லை.

boy

முபாரக்கின் புற நரம்பு மண்டலத்தில் காணப்பட்ட, கட்டி மெதுவாக வளர்ந்து கொண்டிருந்தாலும் பெரிதாகி கொண்டே சென்றது. இந்த விசித்திர நோயானது வழக்கமாக ஒரு வருடத்தில் மில்லியன் மக்களில் இருவரை பாதிக்கிறது. இது பெரும்பாலும் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு தான் இந்த கட்டி வரும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இறுதியாக அபுதாபியில் சிறுவன் முபாரக்கிற்கு நடைபெற்ற ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை அவரது வாழ்க்கையை மீட்டு தந்துள்ளது. கிளீவ்லேண்ட் கிளினிக் அபுதாபி  மருத்துவமனை ஆலோசகர் மற்றும் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் யாசிர் அக்மல் குறிப்பிடுகையில், முபாரக்கின் வயிற்றுக்கு பின்னால் மற்றும் கணையத்திற்கு அருகில் அமைந்திருந்த அந்த கட்டி இது 8 சென்டிமீட்டர் அளவில் இருந்தது.

அவரது உடலை சுற்றியுள்ள நரம்பு செல்களிலிருந்து எழுச்சியடைந்த இந்த கட்டியானது அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை சுரந்தது. இது கோபம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது என்று கூறினார். மேலும் பேசிய மருத்துவர் உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பணி இந்த கட்டியால் தடைப்பட்டது. குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுகுடலுக்கு ரத்தத்தை வழங்கும் முக்கிய பணிகளுக்கு கட்டி இடையூறு விளைவித்தது.

கட்டியை அகற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையின் போது சிறுவன் கல்லீரலுக்கு ரத்தத்தை வழங்கிய நாளங்கள் புனரமைக்கப்பட்டன. அவரது கல்லீரலுக்கு சிக்கல் இல்லாத ரத்த ஓட்டத்தை அளிக்க மருத்துவர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெற்றது. எனினும் அவரது பித்தப்பைக்கு ரத்த ஓட்டம் செல்வது தடைப்பட்டதை அடுத்து பித்தப்பை மற்றும் கணையத்தின் ஒரு சிறிய பகுதியை அகற்ற வேண்டியிருந்தது. ஆறு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு கூடுதல் ரத்த நாளங்கள் சரியாக இயங்குவதை உறுதிசெய்ய முபாரக் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தார் என்று டாக்டர் அக்மல் கூறியுள்ளார்.

கட்டி மீண்டும் வருவதற்கான அபாயத்தைக் குறைக்க கதிர்வீச்சு சிகிச்சையை(radiation therapy) எடுத்து கொண்டுள்ள முபாரக், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்தி இருந்த அவர் மீண்டும் பள்ளிக்கு திரும்பும் அளவிற்கு இயல்பாகியுள்ளார்.

தனக்கு செய்யப்பட்டுள்ள ஆப்பரேஷன் பற்றி கூறியுள்ள முபாரக், “எனக்கு அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமில்லை என்று பல மருத்துவமனைகளால் சொல்லப்பட்டது. ஆனால் கிளீவ்லேண்ட் கிளினிக் அபுதாபியில், அவர்கள் என்னைக் கவனித்து என் வலியை நீக்கி விட்டார்கள், ”என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் தனது உடல்நிலை மேம்படுவதை உணர்வதாகவும் சிறுவன் முபாரக் உற்சாகம் தெரிவித்துள்ளார்.