அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பிரயாணிகளுக்கும் இலவசமாக ரேபிட் கொரோனா PCR பரிசோதனை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 90 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படும் எனவும் பிராந்தியத்திலேயே முதன்முறையாக விமான நிலையத்தில் இலவசமாக கொரோனா பரிசோதனை எடுக்கும் இடமாக அபுதாபி விமான நிலையம் இருக்கும் எனவும் அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு 20,000 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கவும், பயண விதிமுறைகள் மற்றும் குவாரண்டைன் வழிமுறைகளை இந்த ஆய்வகம் மேற்கொள்கிறது என அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
مطار أبوظبي، وبالشراكة مع “طموح للرعاية الصحية” و”بيور هيلث”، يطلق مختبر فحص(PCR) الفوري الجديد الذي يتوفر لجميع المسافرين القادمين إلى #أبوظبي مجاناً. ويمكن الحصول على النتيجة في غضون 90 دقيقة من إجراء الفحص من خلال المختبر الأول من نوعه داخل مطار بالمنطقة. pic.twitter.com/hZOydzQcFK
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) March 9, 2021
ப்யூர் ஹெல்த் (Pure Health) மற்றும் டாமோ ஹெல்த்கேர் (Tamouh Healthcare) ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் பலனாக இந்த ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் 1 மற்றும் 3 ஆம் முனையம் வழியாக வருபவர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனையானது எடுக்கப்படும்.
பரிசோதனை முடிவுகளானது SMS, வாட்சாப் மற்றும் AlHosn அப்ளிகேஷன் வாயிலாக வெளியிடப்படும். 4,000 சதுர மீட்டரில் அமைந்திருக்கும் இந்த பரிசோதனை மையத்தில் 190 ஊழியர்கள் அயராது உழைத்துவருகின்றனர்.
இதுகுறித்துப் பேசிய அபுதாபி விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரி ஷரீஃப் ஹாஷிம் அல் ஹாஷ்மி (Shareef Hashim Al Hashmi),” பயணிகளின் பாதுகாப்பையும், பயண நடைமுறைகளை எளிதாக்கவும் பிராந்தியத்திலேயே முதன்முறையாக இந்த பரிசோதனை நிலையம் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக அபுதாபிக்கு வருவதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல் உலகளவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
அபுதாபிக்கு வருவோர் பயண நேரத்திற்கு முன்னதான 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழை பயணம் துவங்கும்போது சமர்பிக்கவேண்டும். செக் இன் செய்யும்போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பிரிண்ட் வடிவில் சமர்ப்பிக்கவேண்டும். அபுதாபி விமான நிலையத்திற்கு வரும் அனைவருக்கும் PCR பரிசோதனை எடுக்கப்படும்.