அல் நஹ்யான் முகாம் பகுதி( Al Nahyan Camp area) என்று பிரபலமாக அறியப்படும் தலைநகர் அபுதாபியின் அல் மாமூரா(Al Mamoura) பகுதியில் (செக்டர் E25) மொத்தம் 233 புதிய கட்டண வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு அதிக பார்க்கிங் இடங்களை வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த புதிய கட்டண வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre) இதனை அறிவித்துள்ளது.
இந்த செக்டரானது வடக்கே டால்மா தெரு(Dalma Street), தெற்கு மற்றும் மேற்கில் அல் மாமூரா வீதி மற்றும் கிழக்கில் அல் குப் தெரு(Al Qub Street) ஆகியவற்றை எல்லையாக கொண்டுள்ளது. இந்த புதிய பார்க்கிங் இடங்களில் 229 நிலையான பார்க்கிங் மற்றும் 4 பார்க்கிங் இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
பார்க்கிங் இடங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் போக்குவரத்து ஓட்டத்தை பராமரிப்பதற்கும் நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கான ITC முயற்சியின் ஒரு பகுதியாக புதிய கட்டண வாகன நிறுத்துமிடங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இது சட்டவிரோத பார்க்கிங்குகளை குறைக்க உதவும். பார்க்கிங் இடங்களை உகந்த முறையில் பயன்படுத்தவும், பார்க்கிங் இடங்களுக்கான பயனர்களின் தேடல் நேரத்தையும் குறைக்கும் என்று ITC குறிப்பிட்டுள்ளது.
எல்லா நேரங்களிலும் பார்க்கிங் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு தடைகள் ஏற்படுத்த கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.