UAE Tamil Web

“பார்க்கிங் வசதி செய்துகொடுங்கள்” : பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று 12 லட்சம் திர்ஹம்ஸ் செலவில் 120 பார்க்கிங் இடங்களை உருவாக்கிய அபுதாபி அரசு..!

UAE Parking

அபுதாபி: அல் மினா பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களின் பார்க்கிங் சிரமங்களைக் குறைக்கும் விதமாக 1.2 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் 120 புதிய பார்க்கிங் இடங்களை அபுதாபி அரசு உருவாக்கியுள்ளது.

அபுதாபி நகராட்சி மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) ஆகியவை இணைந்து துறைமுகப் பகுதியில் (Port Area) பிளாக் 14 செக்டார் C51 – C58 ல் இந்த புதிய பார்க்கிங் இடங்களை உருவாக்கியுள்ளன.

“தங்களின் வசிப்பிடங்களுக்கு அருகே பார்க்கிங் இடங்கள் அமைத்துத் தருமாறு குடியிருப்பாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், உட்கட்டமைத்துறையை மேம்படுத்தவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது” என நகராட்சி தெரிவித்திருக்கிறது.

மொத்தமுள்ள 120 பார்க்கிங் பகுதியில் 9 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கே 4,396 சதுர மீட்டர்களுக்கு டைல்ஸ் போடப்பட்டுள்ளது; 10 தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன; 9 LED விளக்குத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பார்க்கிங் பகுதியில் 1,302 மீட்டருக்கு சாலை போடப்பட்டு, அதில் 840 கர்ப்ஸ்டோன் டைல்ஸ் (curbstone tiles) ஒட்டப்பட்டுள்ளது.

கடந்தவாரம் ஓல்ட் பஹியா பகுதியில் 56 பார்க்கிங் இடங்கள் மற்றும் கிளப் பகுதிக்குச் செல்லும் வகையில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை அமைக்கும் பணிகள் துவங்கப்படுவதாக நகராட்சி அறிவித்திருந்தது.

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் பார்க்கிங் இடங்களை அமைத்தல் என்னும் தொலைநோக்குப் பார்வையுடன் அபுதாபி நகராட்சி இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன்மூலம் தவறான மற்றும் கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவது குறைக்கப்படும். அதேபோல, வாகனவோட்டிகள் எளிதில் தங்களுக்கான பார்க்கிங் பகுதிகளை அடையாள கண்டுகொள்ள வாய்ப்பும் கிடைக்கும்.

UAE Parking
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap