UAE Tamil Web

மருத்துவமனைகளை குறிவைக்கும் ஹேக்கர்கள் – அபுதாபி அரசின் அவசர நடவடிக்கை..!

You've been hacked!

அபுதாபியில் உள்ள சுகாதார நிறுவனங்களில் நோயாளிகளின் தரவுகளை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றினை அபுதாபி சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது.

- Advertisment -

ஆமென் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இத்திட்டத்தின் மூலமாக தகவல் திருட்டில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து சுகாதார நிறுவனங்களில் சேமித்து வைக்கப்படும் நோயாளிகளின் தரவுகளை காப்பாற்ற வேண்டிய பாதுகாப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா காலத்தில் இருந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவது மற்றும் அதிக பொருளாதார பலன் பெறும் நோக்கத்துடன் பல ஹேக்கர்கள் சுகாதார நிறுவனங்களை தங்களது இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு மாதம், இண்டர்போல் தெரிவித்த தகவலில், ஹேக்கர்கள் தனிமனிதர்களை குறிவைப்பதில் இருந்து விலகி தற்போது அரசு மற்றும் சுகாதாரத்துறை நிறுவனங்களை அதிகளவில் தாக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்காணித்த அமீரக தொழில்நுட்ப அறிஞர்கள், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதங்களில் நிகழ்த்தப்பட்ட சைபர் தாக்குதல்கள் இருமடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.

அமீரகத்தின் மருந்தகத் துறை ஜாம்பவானான Pfizer நிறுவனத்தின் ஆன்லைன் சேமிப்புத் தரவுகள் ஹேக்கர்களால் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய திருட்டில் இருந்து சுகாதார நிறுவனங்களைக் காக்கவே ஆமென் திட்டம் நேற்று முதல் அபுதாபி சுகாதாரத்துறையினரால் துவங்கப்பட்டுள்ளது.

“நோயாளிகளின் தரவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கான தேவைகள் அதிகமிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். ஆகவே, சுகாதாரத்துறையில் இருக்கும் நோயாளிகளின் தரவுகளை காக்க இந்த ஆமென் திட்டத்தை துவங்கியுள்ளோம்” என அபுதாபி சுகாதாரத்துறையின் தலைமை செய்தி பாதுகாப்பு அதிகாரியான அப்துல்லா அல் சயேரி (Abdulla Al Sayari) தெரிவித்தார்.

இத்திட்டத்தின் முதல் பகுதியில் அபுதாபியில் உள்ள 60 சுகாதார நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்படும். அடுத்தடுத்த பகுதிகளில் அபுதாபியில் இருக்கும் பிற சுகாதார நிறுவனங்கள் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும்.

மதிப்பீட்டைத் தொடர்ந்து சுகாதார நிறுவனங்கள், தங்களது நோயாளிகளின் தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய உதவிகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் அபுதாபி சுகாதார தகவல்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு தரநிலை என்னும் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் தரவுகளை பாதுகாக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. சர்வதேச அளவில் நோயாளிகளின் தரவுகளை பாதுகாப்பாக கையாள்வது பற்றிய விழிப்புணர்வை இத்திட்டம் அளித்தது.

இத்திட்டத்தின் மூலமாக 10 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் அபுதாபி முழுவதிலும் உள்ள 1,500 சுகாதார நிறுவனங்கள் கலந்துகொண்டன.