UAE Tamil Web

“சுற்றுலா விசாவிற்கு அனுமதி”: அபுதாபிக்குள் நுழைய இவையெல்லாம் கட்டாயம்..!

TouristVisa

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பல நாட்களாக அபுதபிக்குள் சுற்றுலா வாசிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் டிசம்பர் 24 ஆம் தேதிமுதல் சுற்றுலா விசா வைத்திருப்போர் மீண்டும் அபுதாபிக்குள் வரலாம் என அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

- Advertisment -

சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கான பயண மற்றும் குவாரண்டைன் விதிமுறைகளை ஊடக அலுவலகம் நேற்று வெளியிட்டது. இதுகுறித்து உங்களுக்குள் இருக்கும் சந்தேகங்களுக்கு கேள்வி – பதில் வடிவிலேயே கீழே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் அபுதாபிக்குள் நுழைய கொரோனா PCR நெகட்டிவ் சான்றிதழை வைத்திருப்பது அவசியமா?

நிச்சயமாக. பச்சை நிறப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வருவோர், தங்களது பயண தேதிக்கு முன்னதாக 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

அபுதாபிக்கு வந்ததற்குப் பிறகு மீண்டும் ஒரு கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும். அதன் முடிவுகள் வரும்வரையில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பச்சை நிறப் பட்டியலில் அமைந்துள்ள நாடுகள் எவை?

  1. ஆஸ்திரேலியா
  2. புருனே
  3. சீனா
  4. கிரீஸ்
  5. கிரீன்லாந்து
  6. ஹாங்காங்
  7. மலேசியா
  8. மொரீஷியஸ்
  9. நியூசிலாந்து
  10. சவூதி அரேபியா
  11. சிங்கப்பூர்
  12. தைவான்
  13. தஜிகிஸ்தான்
  14. தாய்லாந்து
  15. உஸ்பெகிஸ்தான்
  16. வியட்நாம்

அபுதாபிக்கு வந்தவுடன் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா?

பயணிகளின் இரண்டு PCR பரிசோதனை முடிவுகளும் (பயண நேரத்திற்கு முன்னதான 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஒன்று மற்றும் அபுதாபி வந்தடைந்தவுடன் எடுக்கப்பட்ட ஒன்று) நெகட்டிவ் என இருக்கும் பட்சத்தில் அபுதாபிக்குள் நுழைந்ததற்குப் பிறகு அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

பயணிகள் அபுதாபி வந்ததற்குப் பிறகான 4 மற்றும் 8 ஆம் நாளில் PCR சோதனைகளை எடுக்க வேண்டுமா?

இல்லை. புதிய வழிமுறைகளின்படி 6 மற்றும் 6 நாட்களுக்கு மேலாக அபுதாபியில் தங்கியிருப்பவர்கள் 6 ஆம் நாளிலும் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்கியிருப்பவர்கள் 12 ஆம் நாளிலும் PCR பரிசோதனை எடுத்தல் வேண்டும்.

பச்சை பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து அபுதாபி வருவோர் பின்பற்றவேண்டிய PCR பரிசோதனை குறித்த வழிமுறைகள் யாவை?

  • பச்சை பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து அபுதாபி வருவோர் தங்களுடைய பயணத்திற்கு முன்னதாகவே தங்களுடைய PCR பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
  • உங்களுடைய நாடுகளைப் பொறுத்து பயண நேரத்திற்கு முன்னதான 48, 72 அல்லது 96 மணிநேரத்திற்குள் PCR பரிசோதனைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, உங்களுடைய நாடுகளுக்கென்று விதிக்கப்பட்டுள்ள பயண விதிமுறைகளை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
  • அபுதாபிக்கு வந்ததும், பயணிகள் தங்கள் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் மருத்துவ அதிகாரிகள் மற்றொரு PCR பரிசோதனையை மேற்கொள்வார்கள்.

மேற்கண்ட வகையினருக்கான குவாரண்டைன் நடைமுறைகள் என்ன?

பச்சை பட்டியலில் இடம்பெறாத நாடுகளில் இருந்து அபுதாபி வரும் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிய உடனேயே குவாரண்டைன் அமைப்பில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு எலெக்ட்ரானிக் கைப்பட்டை ஒன்று வழங்கப்படும். 10 நாள் குவரண்டைன் முழுவதும் அவர்கள் அதனை அணிந்திருக்கவேண்டும்.

எங்கே குவாரண்டைன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவுசெய்வார்கள். அதாவது பயணிகள் ஹோட்டல் அல்லது மருத்துவத் துறையினரால் அளிக்கப்படும் தங்குமிடங்கள் அல்லது பயணிகளின் வீடு என எதில் தங்கவைக்கப்படவேண்டும் என்பதை அதிகாரிகளே முடிவுசெய்வார்கள்.

பச்சை பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து அபுதாபிக்குள் வந்தவர்கள் அதன்பிறகு பின்பற்றவேண்டிய PCR விதிமுறைகள் என்ன?

ஒரே மாதிரியான PCR வழிமுறைகளே கடைபிடிக்கப்படும். அதாவது புதிய வழிமுறைகளின்படி 6 மற்றும் 6 நாட்களுக்கு மேலாக அபுதாபியில் தங்கியிருப்பவர்கள் 6 ஆம் நாளிலும் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்கியிருப்பவர்கள் 12 ஆம் நாளிலும் PCR பரிசோதனை எடுத்தல் வேண்டும்.

எத்தனை நாட்களுக்கு எலெக்ட்ரானிக் கைப்பட்டையை பயணிகள் அணிந்திருத்தல் வேண்டும்?

குவாரண்டைன் முழுவதும் பயணிகள் எலெக்ட்ரானிக் கைப்பட்டையை அணிந்திருத்தல் வேண்டும். அபுதாபி வந்து 10 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வரும்பட்சத்தில் மருத்துவ அதிகாரிகளே கைப்பட்டையை அகற்றுவார்கள்.

PCR பரிசோதனையில் யாருக்கேனும் விதிவிலக்கு உண்டா?

ஆம். 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், தீவிர மற்றும் மிதமான உடல் ஊனமுற்றோருக்கு பயண தேதிக்கு முன்னர் கொரோனா PCR பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என நடைமுறையில் இருந்தது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.