fbpx
UAE Tamil Web

அபுதாபி : ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க அனுமதியளித்தது அரசு..!

vaccine trial

அமீரகம் உட்பட நான்கு அரபு தேசங்களில் மூன்றாம் நிலை பரிசோதனையில் இருக்கும் கொரோனா தடுப்பூசியினை அமீரக சுகாதார ஊழியர்களுக்கு வழங்க சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. தற்போது, அபுதாபி பொதுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் அவர்களது விருப்பத்தின்பேரில் கொரோனா தடுப்பு மருந்தினை வழங்க அரசு அனுமதியளித்திருக்கிறது. ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் அவர்தம் முதனிலை உறவினர்களுக்கும் தடுப்பூசியை வழங்க இசைவு அளித்திருக்கிறது அரசு.

இதுகுறித்து, பள்ளிகளின் முதல்வர்களுக்கு அரசு அனுப்பிய சுற்றறிக்கையில்,” கொரோனா காலத்தில் களப்பணியாற்றும் சுகாதார ஊழியர்களை பாதுகாக்கும் விதமாக அவசர நிலைகளில் கொரோனா தடுப்பூசியை அவர்களுக்கு வழங்க அமீரக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது”

“கொரோனா மருந்தினை பெறத் தகுதிபெற்ற குழுக்களின் பட்டியலில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இவர்களது முதனிலை உறவினர்கள் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்) அவர்தம் விருப்பத்தின்பேரில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ள செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்தவார சனிக்கிழமை, அமீரகத்தில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் இந்த கொரோனா தடுப்பூசியை அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்புக்கான அமைச்சரான அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் ஓவைஸ் (Abdul Rahman Bin Mohammad Al Owais) அவர்கள் பெற்றுக்கொண்டார்.