அபுதாபியில் உள்ள யாஸ் ஐஸ்லேண்டில் ஓட்டுனர் இல்லா புதிய போக்குவரத்து சேவை இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அபுதாபி நகராட்சி மற்றும் போக்குவரத்துறை தெரிவித்திருக்கிறது.
யாஸ் ஐஸ்லேண்டில் இருந்து உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்குச் செல்ல இந்த போக்குவரத்து சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆளில்லா வாகனப் போக்குவரத்து சேவை 2 கட்டங்களாக நடைமுறைக்கு வரவிருக்கிறது.
முதற்கட்டமாக யாஸ் ஐஸ்லேண்டில் மூன்று ஓட்டுனர் இல்லா வாகனங்கள் மக்கள் சேவைக்கு வரும். அதன்பிறகு அபுதாபியின் பல்வேறு இடங்களில் 10 ஓட்டுனர் இல்லா வாகனங்கள் போக்குவரத்திற்கு அறிமுகப்படுத்தப்படும்.
அபுதாபி நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை G42 க்குச் சொந்தமான பயானத் (Bayanat) நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை அளிக்க இருக்கிறது. புதிய வகையிலான மேம்பட்ட போக்குவரத்தினை சாத்தியமாக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரையில் இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வாகனத்தில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.