UAE Tamil Web

அபுதாபி: மால்கள், கடற்கரை உட்பட எந்த பொது இடங்களுக்கு செல்ல வேண்டுமானாலும் இனி Alhosn கிரீன் பாஸ் அவசியம்..!

ShoppingMall

கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி குறித்த தகவல்களைப் பெற உதவும் Alhosn அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி அபுதாபியில் உள்ள பெரும்பாலான பொது இடங்களுக்குச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்கெட்கள், உடற்பயிற்சி நிலையங்கள், ஹோட்டல்கள், பொது பூங்காக்கள், பொது கடற்கரைகள், தனியார் கடற்கரைகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சினிமாக்கள், அருங்காட்சியங்கள், உணவகங்கள் மற்றும் கபேக்கள் ஆகிய இடங்களுக்கு இனி நீங்கள் செல்லவேண்டுமானால் உங்களது Alhosn அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் இருக்கவேண்டும்.

இந்த விதிமுறை ஜூன் 15 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த நடைமுறைகள் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல PCR பரிசோதனை எடுத்துக்கொண்ட நபர்களின் முடிவுகளை வெளியிட அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் புதிய கலர் கோடிங்குகள் (colour-coding) பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதில் PCR பரிசோதனை செல்லுபடியாகும் காலம் முழுவதும் பச்சை நிறத்தில் திரை இருக்கும். இதுவே கிரீன் பாஸ் எனப்படுகிறது.

இவற்றில் ஆறு பிரிவுகள் உள்ளன. அவை,

  • முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்.
  • இரண்டாவது டோஸ் பெறுநர்கள்.
  • முதல் டோசைப் பெற்று இரண்டாவது டோஸ்-காக காத்திருப்பவர்கள்.
  • நிர்ணயிக்கப்பட்ட தேதியைக் கடந்தும் இரண்டாவது டோசை எடுத்துக்கொள்ளாமல் தாமதம் செய்பவர்கள்.
  • தடுப்பூசி பெறுவதிலிருந்து விலக்குப் பெற்றவர்கள்.
  • தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள்.

முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்:

குறைந்தது 28 நாட்களுக்கு முன்னதாகவே இரண்டாவது டோஸைப் பெற்றவர்கள் அல்லது தடுப்பூசி சோதனைகளில் தன்னார்வலர்களாக உள்ளவர்கள் இவர்கள். அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் இவர்களுடைய PCR பரிசோதனை முடிவானது 30 நாட்களுக்கு பச்சை நிறமாகவும், ஆக்டிவ் ஐகானை (E எழுத்து அல்லது கோல்டன் ஸ்டார்) ஏழு நாட்களுக்கும் காண்பிக்கும்.

28 நாட்களுக்கு முன்னர் இரண்டாவது டோசைப் பெற்றவர்கள்: அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் இவர்களுடைய PCR பரிசோதனை முடிவானது 14 நாட்களுக்கு பச்சை நிறத்தில் தோன்றும்.

முதல் டோஸை மட்டுமே பெற்றவர்கள்: இரண்டாவது டோஸ் பெறுவதற்காக காத்திருப்பவர்களுக்கு அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் இவர்களுடைய PCR பரிசோதனை முடிவானது ஏழு நாட்களுக்கு பச்சை நிறத்தில் தோன்றும்.

இரண்டாவது டோஸுக்கு தாமதமாக வருபவர்கள்: முதல் டோஸைப் பெற்றவர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள 48 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தாமதம் செய்பவர்களுக்கு, அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் இவர்களுடைய PCR பரிசோதனை முடிவானது மூன்று நாட்களுக்கு பச்சை நிறத்தில் தோன்றும்.

தடுப்பூசி எடுப்பதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்: அங்கீகரிக்கப்பட்ட செயல்முறைகளின்படி தடுப்பூசி விலக்கு சான்றிதழ்களை வைத்திருப்பவர்களுக்கு, அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் இவர்களுடைய PCR பரிசோதனை முடிவானது, ஏழு நாட்களுக்கு பச்சை நிறத்தில் தோன்றும்.

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள்: தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இருந்து விலக்குப் பெறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தவறியவர்களின் PCR பரிசோதனை முடிவானது, அல்ஹோஸ்ன்-ல் மூன்று நாட்களுக்கு பச்சை நிறத்தில் தோன்றும்.

மேற்கண்ட எல்லா வகைகளுக்கும், தொடர்புடைய பி.சி.ஆர் சோதனை செல்லுபடியாகும் நாட்கள் முடிவடைந்தால் அல்ஹோஸ்ன் நிலை சாம்பல் நிறமாக (grey) மாறும். சோதனை முடிவு பாசிட்டிவாக இருக்கும்போது நிலை சிவப்பு நிறமாக மாறும்.