UAE Tamil Web

“10 மில்லியன் திர்ஹம்சா? எனக்கா? சரி.. எனக்கு வேலை இருக்கு அப்புறம் கால் பண்ணுங்க” – அபுதாபி டியூட்டி ஃப்ரீ நிர்வாகத்தை ஆச்சர்யப்படுத்திய நபர்..!

big ticket

10 மில்லியன் திர்ஹம்ஸ் பணம் உங்களுக்குக் கிடைக்கிறது. அதுவும் புகழ்பெற்ற அபுதாபி ரேஃபில் டிரா மூலமாக. அதிர்ஷ்ட கதவு அகலத் திறந்த விஷயத்தை உங்களுக்குத் தெரிவிக்க, நிர்வாகம் போன் செய்கிறது. என்ன பேசுவீர்கள்? இதை நான் எதிர்பார்க்கவில்லை.. மகிழ்ச்சியில் திளைக்கிறேன்… எனது அதிர்ஷ்டம் என சந்தோஷத்தில் எதையாவது சொல்வீர்கள். அட, ஒரு ஹூ… என சத்தமாவது போடுவோம். இதை எதுவுமே செய்யாமல் இருந்திருக்கிறார் அல் அய்னில் கராஜ் வைத்திருக்கும் ஷாஹித் அகமது மௌல்விஃபியாஸ்.

- Advertisment -

55 வயதான இவருக்கு அபுதாபி டியூட்டி ஃப்ரீ நிர்வாகம் போன் செய்திருக்கிறது. பரிசு கிடைத்திருக்கும் விஷயத்தைச் சொன்னபோது, “அப்படியா? சந்தோசம். கடவுளுக்கு நன்றி. மன்னிக்கவும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள் நன்றி” எனச் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு அபுதாபி டியூட்டி ஃப்ரீ நிர்வாகம் அதிர்ந்திருக்கிறது.

தன்னுடைய 15 வயதில் சொந்த ஊரான சிட்டகாங்கில் இருந்து அமீரகம் வந்திருக்கிறார் ஷாஹித். உழைப்பு. உழைப்பு.உழைப்பு. இதைத்தவிர வேறொன்றும் அறியாதவராய் கஷ்டப்பட்ட இவர் தற்போது சொந்த கராஜை அல் அய்னில் நடத்திவருகிறார்.

“இதற்குப் பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. எனக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடைசிப் பையன் பள்ளியில் படித்துவருகிறார். அவனுக்கு வயது 15. மற்ற இரண்டு மகன்களும் படிப்பினை முடித்துவிட்டனர். மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இப்பணத்தைக் கொண்டு அவர்களது எதிர்காலத்திற்கு திட்டமிட இருக்கிறேன். இந்தப் பரிசுப் பணத்தை அமீரகத்திலேயே முதலீடு செய்வேன். எனது குடும்பத்தை இங்கே அழைத்துவர இருக்கிறேன்” என அமைதியாக் கூறியிருக்கிறார்.

“நான் எனது கராஜில் இருக்கிறேன். வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். எனக்கு எனது வாடிக்கையாளர்களைக் காக்க வைப்பது பிடிக்காது. எனக்கு என் தொழிலே பிரதானம்” என பேச்சை முடித்துக்கொண்டார் ஷாஹித். பொறுமையா இருக்கலாம். அதுக்காக இவ்வளவு பொறுமையா..

ஷாஹித் 008335 என்ற எண் கொண்ட டிக்கெட்டை கடந்த மார்ச் 26 ஆம் தேதி வாங்கியிருக்கிறார். அதுதான் அவரை கோடீஸ்வரர் ஆக்கியிருக்கிறது. அபுதாபி பிக் டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட 1992 ஆம் ஆண்டுமுதல் ஷாஹித் இதில் பங்குபெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டிராவில் பஹ்ரைனைச் சேர்ந்த இந்தியரான ராமன் நம்பியார் மோகன் என்பவருக்கு 5 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசாக கிடைத்திருக்கிறது. அவர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை.