UAE Tamil Web

கோவிட்-19: நவம்பர் 8 முதல் அபுதாபிக்குள் நுழைய புதிய விதிமுறைகள் அறிவிப்பு..

abudhabi

அபுதாபியில் நுழைவதற்கான புதிய விதிமுறைகளை கோவிட் -19 தொற்று நோய்க்கான அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு அறிவித்துள்ளது. கோவிட் -19 தொற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த அமீரகத்திற்குள் நுழைவதற்கான தேவைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

- Advertisment -

அதன்படி நவம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் விதிகள் பின்வருமாறு:

  • அபுதாபிக்குள் நுழைவதற்கு முன் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் -19 பரிசோதனையின் ( PCR அல்லது DPI) நெகட்டிவ் முடிவை கொண்டிருக்க வேண்டும்
  • தலைநகர் அபுதாபிக்கு வருபவர்கள் தொடர்ச்சியாக 4 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்கியிருக்கும் போது, அபுதாபி வந்ததிலிருந்து 4-வது நாளில் பி.சி.ஆர் பரிசோதனை எடுப்பது கட்டாயம்.
  • அதே போல தொடர்ந்து 8 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் அபுதாபியில் தங்கியிருக்கும் போது வந்ததிலிருந்து 8-வது நாளில் பி.சி.ஆர் சோதனை எடுப்பது கட்டாயமாகும். நுழைவிற்கு பின் நான்காம் நாளில் கட்டாய பி.சி.ஆர் சோதனை எடுத்திருந்தாலும், இந்த 8-ம் நாள் பரிசோதனையும் கட்டாயம்.
  • அபுதாபிக்குள் வரும் நாள் ஒன்றாம் நாள் என்று கணக்கிடப்படும்.

அனைத்து அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதி பொருந்தும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அபுதாபியில் தொடர்ச்சியாக 4 அல்லது 8-க்கும் மேற்பட்ட நாட்கள் தங்குவோர், மேற்கண்ட விதிகளின் படி பி.சி.ஆர் சோதனை செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மாற்றம் என்ன.?

இதற்கு முன்னர் அபுதாபியில் நுழைபவர்கள் 6-வது நாளில் பி.சி.ஆர் சோதனை செய்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆறாம் நாளுக்கு பதில் 4-வது நாளிலும், 8-வது நாளிலும் பி.சி.ஆர் சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் நவம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை ஒருவர் அபுதாபிக்குள் நுழைகிறார் என்று வைத்து கொள்வோம். ஞாயிறு அன்று நாள் ஒன்றாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அவர் எட்டு நாட்கள் அல்லது அதற்கு மேல் அபுதாபியில் தங்க திட்டமிட்டிருந்தால், புதன்கிழமை (நான்காம் நாள்) மற்றும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை (8-ம் நாள்) என இரு நாட்களிலும் கட்டாயம் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்றுள்ள தன்னார்வலர்கள் மற்றும் அவசரகால பயன்பாட்டு திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.