UAE Tamil Web

அபுதாபி: குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் இலவச இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி – சேஹா அறிவிப்பு..!

Long-manufacturing-timeline-hampers-annual-flu-vaccine-strain-selection-experts-say

அபுதாபி: அமீரகத்தில் குளிர்காலம் துவங்கிவிட்டது. இந்த பருவகால மாற்றத்தினால் ஏற்படும் நோய்த்தொற்று அபாயத்திலிருந்து மக்களை காக்கும் விதமாக அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அபுதாபி சுகாதார சேவை நிறுவனமான சேஹா அறிவித்திருக்கிறது.

- Advertisment -

சேஹாவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் சில குறிப்பிட்ட இடங்களில் ட்ரைவ் – த்ரூ மூலமாகவும் இலவச தடுப்பூசிகள் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவை இருப்பின் அல் அய்ன் மற்றும் அபுதாபியில் உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை வழங்க இருப்பதாக சேஹா தெரிவித்துள்ளது.

அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம், அபுதாபி சுகாதாரத்துறை மற்றும் அபுதாபி பொது சுகாதார மையம் ஆகிய அமைப்புகளினால் துவங்கப்பட்ட “உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள், உங்களது சமூகத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்” (‘Protect yourself, protect your community) என்னும் திட்டத்தின் அடிப்படையில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பருவகால மாற்றத்தினால் ஏற்படும் காய்ச்சலைக் கட்டுக்குள் வைப்பதில் தடுப்பூசியின் பங்கினைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுகாதாரத்துறை பணியாளர்களின் நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கும் அவசியத்தை வலியுறுத்தவும் இந்த இலவச தடுப்பூசித் திட்டத்தை சேஹா முன்னெடுத்திருக்கிறது.

தடுப்பூசி பெற விரும்புவோர் அதற்காக முன்பதிவு செய்ய, சேஹாவின் அழைப்பு மையத்திற்கு 80050 என்ற எண்ணிற்கு அழைக்கவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தபடி தடுப்பூசி

குடியிருப்பாளர்கள் வீட்டில் இருந்தபடியே சேஹாவினைத் தொடர்புகொண்டு தடுப்பூசிகளைப் பெறமுடியும். வீட்டில் எத்தனைபேர் இருந்தாலும் 500 திர்ஹம்ஸ் பணம் செலுத்தி அனைவரும் தடுப்பூசியினைப் பெறலாம் என சேஹா தெரிவித்துள்ளது. இதற்கு முன்பதிவு செய்ய விரும்புவோர் 027117117 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

“கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்சா ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. அனைவரின் பாதுகாப்பையும் இந்தாண்டு உறுதிசெய்யவும் சுகாதாரத் துறையின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. மக்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டு ஆரோக்கியமாக இருக்கும்போது, கொரோனா போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிக்க மருத்துவர்களால் கூடுதல் நேரம் ஒதுக்க முடியும்’ என சேஹாவின் ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் தலைமை செயல்பாட்டு அதிகாரி மருத்துவர் நோரா அல் கைதி (Noura Al Ghaithi) தெரிவித்தார்.