அபுதாபியில் இன்று சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு (IDEX) மற்றும் கடற்படை பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (NAVDEX) துவங்குகிறது. இதில் 900 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்த வருட கண்காட்சியில் இஸ்ரேல், லக்ஸம்பர்க், போர்ச்சுக்கல், அஜர்பைஜான் மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய ஐந்து நாடுகள் கலந்துகொள்கின்றன.
அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடைய ஒப்புதலுடன் அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதிவரையில் இந்தக் கண்காட்சி நடைபெற இருக்கிறது.
இந்த கண்காட்சியின் மூலமாக இதில் கலந்துகொள்ளும் நிறுவனங்களுக்கும் இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச நிறுவனங்களுக்கும் இடையே புதிய உறவுகளை தோற்றுவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, உலக சமாதானத்திற்கு எவ்வாறு தொழில்நுட்பம் உதவுகிறது என்பதனை பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் தெரிந்துகொள்ள இந்தக் கண்காட்சி வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.