அமீரகத்தில் குளிர்காலம் துவங்கிவிட்டது. பனிப்புகையும், ஈரப்பதம் மிகுந்த காற்றுமாக சில நேரங்களில் வானிலை இதமாக இருக்கிறது. இப்படியான சந்தர்ப்பத்தை தங்களது வீட்டின் பால்கனியிலிருந்து அனுபவிக்க பலரும் விருப்பப்படுவார்கள்.
ஆனால், குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்கள், பால்கனி அருகே தங்களது குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என அபுதாபி காவல்துறை எச்சரித்திருக்கிறது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினைப் பகிர்ந்துள்ள அபுதாபி காவல்துறை, “பால்கனிக்குப் பக்கத்தில் நாற்காலி உள்ளிட்ட பர்னிச்சர்களை வைக்க வேண்டாம். குழந்தைகள் எளிதாக அவற்றின் மீது ஏறி வெளியே எட்டிப்பார்க்க ஆசைப்படுவார்கள். அவர்களால் தங்களது சம நிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவறி விழுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது” என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#أخبارنا | بالفيديو .. #شرطة_أبوظبي تدعو لتعزيز مراقبة الأطفال لحمايتهم من حوادث السقوط #أخبار_شرطة_أبوظبي https://t.co/R2BS59H2yp pic.twitter.com/5sbGyY7Cqf
— شرطة أبوظبي (@ADPoliceHQ) October 30, 2020
எப்பொழுதும் குழந்தைகளின் மீது கவனமாக இருக்கவேண்டும் எனவும், வீட்டின் பிற அறைகளில் இருந்து சேர்களை பால்கனிக்கு அவர்களால் (குழந்தைகளால்) எடுத்துச்செல்ல முடியும். அதனால் கதவுகள் மற்றும் ஜன்னலை மூடியே வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வேறெந்த வேலையிலும் கவனத்தை செலுத்தவேண்டாம் எனவும் பால்கனிக்கு தடுப்புகள் மற்றும் பூட்டுகள் அமைக்க காவல்துறையினர் வலியுறுத்தியிருக்கின்றனர்.
தேவைப்படாத நேரங்களில் பால்கனிக் கதவுகளை மூடியே வைக்கும் படியும், ஸ்லைடிங் கதவுகளை குழந்தைகளால் எளிதில் திறக்க முடியும் என்பதால் அவற்றிற்கு பூட்டு அவசியம் எனவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.