UAE Tamil Web

அமீரக சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அபுதாபியில் புதிய மையம்.!

law

அமீரகத்தின் சட்டங்களைப் புரிந்து கொள்வதற்கும், சட்ட நடைமுறைகளைப் பற்றி தெரியாதவர்களுக்கு உதவிகளை வழங்கவும் அபுதாபியில் ஒரு புதிய விழிப்புணர்வு மையம் துவக்கப்பட்ட உள்ளது.

- Advertisment -

மசோலியா(Masouliya-பொறுப்பு) என்றழைக்கப்படும் இந்த புதிய சமூக சட்ட விழிப்புணர்வு மையம்,வழக்கறிஞர் சேவையை பெற முடியாதவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சட்ட கலாச்சாரம் குறித்த கருத்தை சமூகத்தில் பரப்புவதே இந்த மையத்தின் முக்கிய நோக்கம். பிராந்தியத்தில் முதன் முதலில் இது மாதிரியான மையம் துவக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் நாசர் மலல்லா குறிப்பிட்டுள்ளார்.

இந்த மையத்தின் வல்லுநர்கள் நாட்டில் பின்பற்ற வேண்டிய சட்டங்களைப் பற்றிய மக்களின் அறிவை மேம்படுத்த முயற்சிப்பார்கள். செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி மக்களுக்கு கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இணைய குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் பற்றி தெரியாமல் இருந்தாலோ அல்லது சமூக ஊடகங்களில் எழுதுவதற்கு எது சரியானது போன்ற எளிய விஷயங்கள் குறித்தும் சந்தேகம் இருந்தாலோ அல்லது எந்தவொரு சட்டத்தைப் பற்றியும் சந்தேகம் கொண்டிருந்தாலோ இந்த மையத்திற்கு சென்று மக்கள் தெளிவடையலாம்.

முதலாளிகளிடமிருந்து பெற வேண்டிய இறுதி செட்டில்மென்ட் அல்லது கார் விபத்துக்கள் அல்லது சொத்து தகராறு மற்றும் பிறவற்றிற்கான இழப்பீடு குறித்த சட்டங்களை தெரியாத தொழிலாளர்கள் அல்லது குடியிருப்பாளர்களுக்கு இந்த மையம் சட்ட ஆலோசனைகளை வழங்கும். அதே போல குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு இந்த மையம் சட்ட உதவிகளையும் வழங்கும் என்று வழக்கறிஞர் நாசர் கூறியுள்ளார். சில நீதிமன்ற வழக்குகளுக்கு வசதியில்லாத நபர் சட்ட நிபுணரை நியமிக்க இந்த மையம் உதவக்கூடும். ஒரு நபரின் நிதி சிக்கல்கள் சரிபார்க்கப்பட்ட பின் இந்த உதவி செய்யப்படும் என்றார்.

இளைஞர்களை பாதுகாத்தல்

கொடுமைப்படுத்துதல், அவதூறு செய்தல், வன்முறையைத் தூண்டுதல் மற்றும் ஆன்லைன் அல்லது கேமிங் போதை போன்ற சமூக விரோத நடத்தைகளை தடுப்பதையும் இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் கூட்டங்களும் இருக்கும்.

பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் நபர்களைக் கண்காணிக்க ‘மசோலியா’ ஒரு முக்கிய மையம் என்று சட்ட நிபுணர் அலி அல் அபாதி கூறியுள்ளார். தொற்றுக்கு மத்தியில், மக்கள் அதிகளவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர், ஆன்லைனில் அதிகம் நேரத்தை செலவிடுகிறார்கள். சட்ட முறைமை குறித்து பள்ளியில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது முக்கியம் என்று குறிப்பிட்டார்.அபுதாபியின் புதிய மையத்தை சமூக உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.