UAE Tamil Web

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் 1 லட்சம் திர்ஹம்ஸ் வரையில் அபராதம் விதிப்போம் ; எச்சரிக்கும் அபுதாபி அரசு..!

wastages

தங்களது கடைகளில் குப்பைத் தொட்டிகள் வைக்காத விற்பனையகங்களுக்கு அபராதம் விதிக்கும் பணிகள் அபுதாபியில் நடைபெற்றுவருகின்றன. அபுதாபி நகராட்சி மற்றும் கழிவு மேலாண்மை மையம் தத்வீர் ஆகியவை இணைந்து, கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்கவும், சுத்தமான சுற்றுப்புறத்தினை பேணவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளன.

இத்திட்டத்தின் மூலம், கடைகள் தங்களது வளாகங்களின் முகப்புப் பகுதியில் குப்பைத் தொட்டிகளை வைக்கவில்லை எனில் 1000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரத்தினை சுத்தமாக வைத்துக்கொள்ளும் நோக்கிலும் அதற்குரிய இடங்களைத் தவிர்த்து பிற இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்கும் வகையிலும் இத்திட்டத்தை நகராட்சி மற்றும் தத்வீர் ஆகியவை முன்னெடுத்துள்ளன.

பொதுமக்கள் மற்றும் கடைகள் குப்பைகளை பொது இடங்களில் கொட்ட வேண்டாம் என நகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் கட்டுமானப் பகுதிகள், கடைகள், தொழில்துறைப் பகுதிகளில் என மொத்தம் 236,000 ஆய்வுகளை நகராட்சி மற்றும் தத்வீர் மேற்கொண்டுள்ளன.

கடைகள், தொழிலகங்கள் மற்றும் பணியகங்களில் பொது சுகாதாரம் குறித்த 102,300 ஆய்வுகளும் கட்டுமானப் பகுதிகளில் 1,724 ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அபராதங்களின் பட்டியல்

  • பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் மற்றும் எச்சில் உமிழ்ந்தால் 1000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
  • வாகனவோட்டிகள் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால்  1000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படுவதோடு 6 கரும்புள்ளிகளும் விதிக்கப்படும்.
  • வேளாண்மைக் கழிவுகளை அதற்குரிய பகுதிகளில் இல்லாமல் பொது இடங்களில் கொட்டுவோருக்கு 10,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
  • கட்டுமானக் கழிவுகளை அதற்குரிய பகுதிகளில் இல்லாமல் பொது இடங்களில் கொட்டுவோருக்கு 10,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
  • கட்டுமானக் கழிவுகள் அல்லது கழிவு நீரை அதற்காக வகுக்கப்படாத இடங்களில் கொட்டுவோருக்கு 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
wastages
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap