அமீரகத்தில் 49 வது தேசியதினம் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக அபுதாபியின் சாலையோரப் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கார்காலப் பூச்செடிகளை அபுதாபி நகராட்சி நட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்தப் பகுதிகளை சுத்தம் செய்வது, சிதைந்த சாலைகளை செப்பனிடுவது ஆகிய பணிகள் அபுதாபி நகராட்சி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அமீரக தேசிய தினத்தை பொது மக்கள் புத்துணர்வோடும் அழகிய சூழலோடும் கொண்டாடும் வகையில் இந்நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக நகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த வருட தேசிய தின கொண்டாட்டத்தைக் காண அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அதற்குத் தகுந்த பராமரிப்புப் பணிகளும் பொழுதுபோக்கு வசதிகளும் அதிகளவில் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“அமீரக தேசிய தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டின் ஒருபகுதியாக பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் சாலைப் புணரமைப்பு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. செடிகள் மற்றும் குறு மரங்களின் வடிவங்களை சீரமைத்தல், பேரீச்ச மரங்களில் உள்ள தேவையில்லாத கிளைகளை அகற்றுதல், சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான கார்கால மலர்களை நடுதல் போன்ற வேலைகள் நடைபெற்றுவருகின்றன” என நகராட்சி தெரிவித்திருக்கிறது.
அதேபோல பழுதான போக்குவரத்து தகவல் பலகைகள் சரிசெய்யப்பட்டிருப்பதாகவும், சாலையோரக் கற்களில் ஏற்பட்ட பாதிப்புகள் செப்பனிடப்பட்டிருப்பதாகவும் நகராட்சி அலுவலர்கள் தெரிவித்திருக்கின்றனர்.