UAE Tamil Web

அபுதாபி: பணியிடங்களில் கை குலுக்கினால் சம்பளம் கட் – அரசின் அதிரடி அறிவிப்பு..!

Emirati-Greetings

அபுதாபி மனிதவள மேம்பாட்டு ஆணையம், 2020 ஆம் ஆண்டின் 16 ஆம் எண் கொண்ட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி அபுதாபி அரசு அலுவலகங்களில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள பல்வேறு விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்பட இருக்கும் அபராதம் பற்றி சுட்டப்பட்டுள்ளது. அதன்படி,

- Advertisment -

அலுவலகத்தில் சக பணியாளருடன் கைகுலுக்கும் நபர்களுக்கு முதன்முறை எச்சரிக்கையும் இரண்டாம் முதல் ஒருநாள் ஊதியம் அபராதமாக பிடிக்கப்படும் எனவும் இதே தவறை மீண்டும் மூன்றாவது முறை தொடர்ந்தால் 3 நாள் ஊதியம் அபராதமாகப் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கான வாய்ப்பு இருக்கும்படி சந்தேகிப்பவர்கள் மற்றும் கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்கள் அலுவலகங்களுக்கு வந்தால், முதன்முறை 5 நாட்களுக்கான ஊதியமும் இரண்டாம் முறை 10 நாட்களுக்கான ஊதியமும், மூன்றாவது முறை 15 நாட்களுக்கான ஊதியமும் அபராதமாக பிடிக்கப்படும்.

கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தவர்கள் அலுவலகத்திற்கு வந்தால் அவருடைய 15 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். இதுபோன்ற விதிமுறை மீறல்களுக்கும் அதற்கான சம்பளப் பிடித்தம் பற்றியும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் முறை மீறலுக்கு எச்சரிக்கையும், இரண்டாம் முறை விதிமீறலுக்கு ஒருநாள் ஊதியமும் மூன்றாம் முறை விதிமீறலுக்கு இரண்டு நாள் ஊதியமும் பிடித்தம் செய்யும் வகையிலான 4 விதிமீறல்கள் குறித்து அந்த சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாதது, அலுவலகத்தில் மற்றும் பொது இடங்களில் சமூக விலகலைக் கடைபிடிக்காதது, ஒவ்வொரு மாதமும் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளாதது உள்ளிட்ட விதிமுறை மீறல்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தம்ளர்களை பயன்படுத்தாதிருத்தல், தரையில் ஒட்டப்பட்டிருக்கும் சமூக விலகல் குறித்த ஸ்டிக்கரின் படி செயல்படாதிருத்தல் மற்றும் பணியிடத்திற்குள் நுழையும் போது உடல்வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்ள தவறுதல் ஆகிய விதிமீறலுக்கு முதன்முறை வாய்வழியாகவும் இரண்டாம் முறை எழுத்துப்பூர்வமாகவும் எச்சரிக்கை அளிக்கப்படும். மூன்றாம் விதிமுறை மீறலுக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.