UAE Tamil Web

நான் அபுதாபி இளவரசர் பேசுகிறேன், எப்படி இருக்கீங்க? – காவல்துறை அதிகாரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷேக் முகமது..!

hammadi

கடந்த வாரத்தில் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்துக்கு நடுவே, பிரேக் டவுனான வாகனத்தோடு சிரமப்பட்டுக்கொண்டு இருந்த முதியவருக்கு உதவிய ஷார்ஜா காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி சார்ஜன்ட் அகமது ஹசன் அல் ஹம்மாடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஏற்கனவே ட்விட்டர் மூலமாக ஹம்மாடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தாலும் தற்போது போன்கால் மூலமாக இன்பதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

“உங்களுடைய குரலைக் கேட்கவும், உங்களுக்கு நன்றி கூறவுமே நான் போன் செய்தேன். என்னையும் உங்களுடைய குடும்பத்தையும் நமது மண்ணையும் பெருமைகொள்ளச் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி. நீங்கள் செய்த நற்காரியத்தின் பலனாக அல்லா உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் தரட்டும்” என பேச்சின்போது இளவரசர் குறிப்பிட்டார்.

உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? என இளவரசர் கேட்டபோது துளியும் யோசிக்காமல் உங்களை சந்திக்கவேண்டும் என ஹம்மாடி தெரிவித்திருக்கிறார். அதற்குப் பதிலளித்த இளவரசர்,” உங்களை சந்திப்பதில் நானும் மகிழ்ச்சியடைவேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இளவரசருடன் ஹம்மாடி பேசும் வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பணம் வேண்டாம்…

சூடானைச் சேர்ந்த சைன் அல் அபிதின் என்பவர் ஓட்டிச்சென்ற வாகனம் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் நின்றுபோகவே, ஹம்மாடி தனது காரைவிட்டு இறங்கிச் சென்று அவருக்கு உதவியிருக்கிறார்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொண்ட ஹம்மாடி, வாகனத்தை இழுத்துச்செல்ல (towing service) ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான பணத்தையும் ஹம்மாடியே கொடுத்துள்ளார். அபிதின் பணத்தை அளிக்க முயன்றிருக்கிறார். ஆனால், அதனை வாங்க மறுத்த ஹம்மாடி,” நீங்கள் என்னுடைய அப்பா அல்லது மூத்த சகோதரர் போன்றவர். நீங்கள் எனக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ரேடியோ நேரலை ஒன்றில் பேசிய அபிதின்,” அவருடைய பெயரை அவரது பேட்ஜ் மூலமாக அறிந்துகொண்டேன். நல்லவர்களால் இன்னும் இந்த பூமியில் நன்மைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதை மற்றவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இதனை ரேடியோவில் கூற முடிவெடுத்தேன்” என்றார்.

hammadi
0 Shares
Share via
Copy link