UAE Tamil Web

“குண்டு வெடித்தது போல சப்தம் கேட்கும்” – அபுதாபியில் நாளை வெடிபொருள் வைத்து தகர்க்கப்பட இருக்கும் 4 கட்டிடங்கள் – ஏற்பாடுகள் தீவிரம்..!

NAT-MEENA-NEW

அபுதாபியில் உள்ள மினா சயீத் பகுதியை மீளுருவாக்கம் செய்ய இருப்பதாக அபுதாபி அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் ஒருபகுதியாக நாளை இங்குள்ள மீனா பிளாசா டவர்களை வெடிபொருள் கொண்டு தகர்க்க இருக்கிறது அபுதாபி நகராட்சி.

- Advertisment -

1972 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மினா சயீத் பகுதி பல்வேறு வர்த்தகங்களுக்கு பெயர்போனது. மீன் மார்கெட், இறைச்சிகூடங்கள், காய்கறி மார்கெட், அபுதாபி கார்பரேடிவ் சொசைடி என பல்வேறு வகையான வர்த்தக நிறுவனங்கள் இங்கே இருக்கின்றன.

இந்த டவர்கள் 10 வினாடியில் தரைமட்டமாக்கப்படும் என வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனை சுற்றுலாத் தலமாகவும், குடியிருப்புக்கான இடமாகவும், பிரம்மாண்ட மீன் மார்கெட் உருவாக்குவது போன்ற பல்வேறு கட்டுமானப் பணிகளை நோக்கமாகக்கொண்டு இந்த மீளுருவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மீனா பிளாசாவின் 4 டவர்கள் தகர்க்கப்பட இருக்கின்றன. மொத்தம் 144 தளங்களைக்கொண்ட இந்த டவர்கள் 10 வினாடியில் தரைமட்டமாக்கப்படும் என வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

“இந்த வெடிப்பினால் நிகழும் அதிர்வு மக்களுக்கோ பொருட்களுக்கோ எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த வெடிபொருள் நிபுணர்களின் அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி மினா சயீத் பகுதியில் 1,100 மீட்டருக்கு ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வேண்டிவரும். இப்பகுதியின் அருகே வசிக்கும் மக்கள் குண்டு வெடிப்பைப்போல் சப்தத்தைக் கேட்பார்கள்” என கட்டட தகர்ப்பு வேலைகளை கவனிக்கும் மொடோன் நிறுவனத்தின் டெலிவரி அதிகாரியாகப் பணிபுரியும் அகமது அல் ஷேக் அல் ஸாபி தெரிவித்தார்.

“கட்டிடத்தை தகர்ப்பதற்கான வெடிபொருள் நிரப்பும் பணி அபுதாபி காவல்துறையுடன் இணைந்து நிறைவடைந்தது. இந்த வெடிப்பினால் ஏற்படும் தூசு, அதிர்வு மற்றும் ஒலி மாசுபாடு ஆகியவை குறித்த அறிக்கைகள் வெளியிடப்பட்டு சரிபார்க்கப்பட்டன” என அல் ஸாபி தெரிவித்தார்.

மூடப்படும் சாலைகள்

அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் (ITC), அபுதாபி நகராட்சி மற்றும் அபுதாபி போலீஸ் ஆகியவை இணைந்து மினா சயீத் பகுதிகளுக்கான போக்குவரத்துக் கட்டுப்பாட்டை விதித்திருக்கின்றன. இதன் ஒருபகுதியாக சில சாலைகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.

போக்குவரத்து கட்டுப்பாட்டின் முதற் பகுதி இன்று காலை 10 மணி முதல் டவர்கள் இடிக்கப்படும் வரையில் நீடிக்கும். இதில் அல் மினா வீதி அதன் குறுக்குவழி சந்திப்பில் (intersection) இருந்து மூடப்படும். கூடவே அல் ஷியா தெருவும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் கலீஃபா பின் சயீத் சாலையில் இருந்து மினா சயீத் பகுதிக்குச் செல்லும் அத்தனை பாதைகள், முகப்புகளும் மூடப்படும்.

போக்குவரத்து கட்டுப்பாட்டின் இரண்டாம் பகுதி நாளை காலை 6 மணிக்குத் துவங்கும். இதில், ஷேக் சயீத் சுரங்கப்பாதை இருவழிகளிலும் மூடப்படும். ஷேக் கலீஃபா மேம்பாலத்திற்குச் செல்லும் ஷேக் கலீஃபா பின் சயீத் சாலை மூடப்படும்.

அல் மரியா தீவில் இருந்து மினா சயீத் பகுதிக்கு வருபவர்களுக்கான ஹம்தான் பின் முகமது சாலை மூடப்படும். கார்னிச் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஷேக் சயீத் சாலையில் மேலை குறுக்குவழி சந்திப்பிற்குச் செல்லும்படி பாதைமாற்றப்படும்.

பேருந்து பாதை மாற்றம்

இன்று இரவு 7 மணிமுதல் நாளை மாலை 6 மணிவரையில் 8, 9, 11, 44, 45 மற்றும் 56 ஆகிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளின் பாதை மாற்றப்பட்டுள்ளதாக ITC தெரிவித்திருக்கிறது. இந்நேரங்களில் டாக்சிகள் இயங்கவேண்டாம் எனவும், இப்பகுதிகளில் இருக்கும் பார்க்கிங் இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சரியான முறையில் இயங்குவதை அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவினர், ITC அதிகாரிகளுடன் இணைந்து உறுதிப்படுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.