அபுதாபி: இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சிக்கி இருவர் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
முதல் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அல் அய்னின் நஹில் பகுதியில் உள்ள பாலைவனம் அருகே நிகழ்ந்திருக்கிறது. அமீரகத்தைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.
பைக்கை ஓட்டியவர், விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், அவரது நண்பர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை இயக்கிய மற்றொரு நபரும் சாலை விபத்தில் மரணமடைந்திருக்கிறார். சைஹ் சப்ரா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. வாகனத்தில் பயணித்த மற்றொரு நபர் மிதமான காயங்களோடு உயிர்தப்பினார்.
அனைத்து வாகனவோட்டிகளும் குறிப்பாக பாலைவனப் பகுதிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கவனமுடன் பின்பற்றவேண்டும் என அபுதாபி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.