UAE Tamil Web

1 திர்ஹம்க்கு விமான டிக்கெட்; 2 நாட்களுக்கு நீடிக்கும் ஆஃபர் – விஸ் ஏர் அபுதாபி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

WIZZ Air

விஸ் ஏர் அபுதாபி நிறுவனம் தனது முதல் விமானத்தினை கிரீஸ் நாட்டிற்கு இயக்க இருக்கிறது. இதில் என்ன பிரமாதம் என்கிறீர்களா? இருக்கிறது. இந்த முதல் பயணத்தை முன்னிட்டு 1 திர்ஹம்க்கு விமான டிக்கெட் விற்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

- Advertisment -

அபுதாபியைச் சேர்ந்த ADQ நிறுவனமும் விஸ் ஏர் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனமும் இணைந்து விஸ் ஏர் அபுதாபி என்ற புது விமான நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் முதல் விமானம் ஏதென்ஸ், தெசலோனிகி, அலெக்ஸாண்ட்ரியா, குட்டாசி, லார்னாக்கா ஆகிய இடங்களுக்குப் பயணிக்க இருக்கிறது. எதிர்வரும் மாதங்களில் கூடுதல் இடங்களுக்கும் விமான சேவை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 திர்ஹம்க்கு டிக்கெட்

வரும் ஜனவரி 15 ஆம் தேதி ஏதென்ஸ் மற்றும் தெசலோனிகி ஆகிய நகரங்களுக்கு ஒற்றை வழியாக (one-way ticket) இயக்கப்பட இருக்கும் விஸ் ஏர் அபுதாபி நிறுவனத்தைச் சேர்ந்த விமானத்தில் பயணிக்க இருக்கும் நபர்களுக்கு 1 திர்ஹம்க்கு டிக்கெட் வழங்கப்பட இருக்கிறது.

இப்படி, மொத்த விமான இருக்கைகளையும் சேர்த்து 2021 டிக்கெட்டுகள் இந்த பிரத்யேக தள்ளுபடி விலையில் விற்கப்பட இருக்கின்றன. இந்த டிக்கெட் முன்பதிவு ஜனவரி 10-11 ஆம் தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கே தள்ளுபடி விலையில் டிக்கெட் கிடைக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டுப் பரிசு

விஸ் ஏர் அபுதாபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கீஸ் வான் ஷைக் (Kees Van Schaick) இதுகுறித்துப் பேசுகையில்,” அமீரகத்தின் புதிய விமான நிறுவனம் மக்களுக்கு புதியவகை பயண அனுபவத்தைத் தர இருக்கிறது. நாங்கள் புத்தாண்டை இப்படி வித்தியாசமாக வரவேற்கிறோம். மக்கள் மிகக்குறைந்த விலையில் புதிய இடங்களுக்குப் பயணிக்க இத்திட்டம் உதவும். இந்த அதிரடி விலைக்குறைப்பு டிக்கெட்டுகள் விரைவில் விற்றுத்தீரும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.