UAE Tamil Web

அபுதாபி: புதிய கொரோனா தடுப்பூசி மையத்தைத் திறந்த அமீரக அரசு..!

Corona Vaccine Centre

அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக எளிதில் கிடைக்க வழிவகை செய்யும் பொருட்டு அபுதாபியில் உள்ள மஸ்தார் சிட்டியில் கூடுதல் தடுப்பூசி மையத்தைத் திறந்திருக்கிறது அமீரக அரசு.

முபதலா ஹெல்த் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இந்த புதிய தடுப்பூசி மையம் திகழ இருக்கிறது. அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம், அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் (Seha) மற்றும் தாக்குப்பிடிக்கும் வகையிலான கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டில் உலகளவில் தலைமையாகத் திகழும் மஸ்தார் ஆகியவை இந்த மையத்தினை உருவாக்க உதவிகளை அளித்துள்ளன.

இந்த மையத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட ஏமிராட்டிகள் மற்றும் குடியிருப்பாளர்கள், நெடுநாள் நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நேரில் வந்து கொரோனா தடுப்பூசியின் முதல் டோசைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோல, 50 வயதிற்கும் குறைவான நபர்கள் இரண்டாவது டோசைப் பெற்றுக்கொள்ளலாம். ஞாயிறு முதல் வியாழன் வரையிலான நாட்களில் காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரையில் இம்மையம் திறந்திருக்கும். தடுப்பூசி பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் எவ்வித முன்னனுமதியும் பெறத் தேவையில்லை.

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வருபவர்கள் தங்களது எமிரேட்ஸ் ஐடியை எடுத்துவருதல் வேண்டும். அதேபோல, அவர்கள் தங்களது மொபைல் போனில் ALHOSN அப்ளிகேஷனை தரவிறக்கிக்கொள்ள வேண்டும்.

மஸ்தார் சிட்டியின் சஸ்டைனபிள் ரியல் எஸ்டேட் பிரிவின் தற்காலிக நிர்வாக இயக்குனர் அப்துல்லா பலலா இதுகுறித்துப் பேசுகையில்,” கொரோனா தடுப்பூசி மையத்தினை துவங்கி, கொரோனா பரவலுக்கு எதிரான போரில் நாங்களும் பங்கெடுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தடுப்பூசி மையங்களை நிர்வகிப்பதில் முபதலா அருமையாக பணியாற்றி வருகிறது. அமீரகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகவும் எளிதிலும் கிடைக்க முயற்சிப்பதில் முபதலாவின் உறுப்பினராக நாங்கள் பெருமைகொள்கிறோம்” என்றார்.

“மஸ்தார் சிட்டி என்பது சுகாதார மற்றும் பயோடெக் நிறுவனங்கள் உட்பட உலகத் தரம் வாய்ந்த நிலையான தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களின் வளர்ந்து வரும் மையமாகும். மேலும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான அமீரகத்தின் முயற்சிகளை ஊக்குவிக்கும் நிறுவனங்களை உருவாக்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, தொழில்நுட்ப நிறுவனமான ஜி 42, மார்ச் 2020 இல் மஸ்தார் நகரில் உலகின் மிகப்பெரிய கோவிட் -19 சோதனை நிலையத்தைத் திறந்தது. இது சீனாவிற்கு வெளியே செயல்படும் முதல் பெரிய அளவிலான சோதனை மையமாகும். ஒரு கோவிட் -19 தடுப்பூசி மையத்தை வைத்திருப்பது எங்களுடைய அடுத்த கட்ட முயற்சியாக இருக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Corona Vaccine Centre
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap