UAE Tamil Web

அபுதாபியில் இங்கெல்லாம் காய்கறி, பழங்கள் வாங்கவேண்டாம் – எச்சரிக்கும் அரசு..!

vegetables Market

அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை (ADAFSA) முக்கிய அறிவிப்பு ஒன்றினை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், தெருவில் விற்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை யாரும் வாங்கவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

வீதிகளில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பதில்லை எனவும் இதனால் கொரோனா தொற்று அபாயம் இருப்பதாகவும் ஆணையம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இவ்வாறு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய ஆணையத்திடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக கடைபிடிக்கின்றனரா? சுகாதாரமான சூழல் நிலவுகிறதா என்பதை ஆணைய அதிகாரிகள் உறுதி செய்த பிறகே உரிமம் வழங்குவார்கள்.

இதேபோல, இறைச்சிக் கடைகளுக்கும் உரிமம் அவசியம். இறக்குமதியான இறைச்சி வைக்கப்படும் நிலையங்கள், கால்நடைகளை இறைச்சிக்காக பலியிடும் இடங்கள் ஆகியவற்றை ஆணையம் சோதனையிடும்.

பாதுகாப்பில்லாத இடங்களில் இருந்து பொருட்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புதிய விழிப்புணர்வு திட்டம் ஒன்றினை ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே உணவுப் பொருட்களை வாங்கி, உங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான உரிமம் பெறாத சாலையோர வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும். ஏனெனில், சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை இத்தகைய வியாபாரிகள் கடைபிடிக்கத் தவறுவதால் கொரோனா நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது”

அபுதாபியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இம்மாதிரி பாதுகாப்பில்லாமல் விற்பனை செய்பவர்கள் குறித்து அபுதாபி தகவல் தொடர்பு மையத்திற்கு, 800555 என்ற எண்ணிற்கு அழைத்து குடியிருப்பாளர்கள் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.