UAE Tamil Web

சர்க்கரை நோயை இனி 100% குணப்படுத்தலாம் – அமீரகத்தின் முதல் கணைய மாற்று அறுவைசிகிச்சை வெற்றி..!

ClevelandClinic

அபுதாபியில் உள்ள கிளீவ்லேன்ட் மருத்துவமனையில் டைப் 1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வெற்றிகரமாக கணைய மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண்ணிற்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

- Advertisment -

புதிய சிறுநீரகத்தின் உதவியால் பெண்ணின் உடம்பில் உள்ள ரத்தம் டயாலிசிஸ் தேவையின்றி தாமாகவே சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன. கணைய மாற்று அறுவை சிகிச்சை காரணமாக அவர் பிறந்ததில் இருந்து முதன் முறையாக அவரது உடம்பில் இன்சுலின் சுரக்கிறது. இனி இன்சுலினை ஊசி வழியாக எடுத்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் அந்தப் பெண்ணிற்கு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

“கணைய மாற்று அறுவை சிகிச்சை என்பது அமீரகத்தில் மக்களின் வாழ்க்கையை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை. டைப் 1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இன்சுலின் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் தவிக்கும் மக்களுக்கு இந்த கணைய மாற்று அறுவை சிகிச்சை மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை” என உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குழுவிற்குத் தலைமை தாங்கிய டாக்டர் லூயிஸ் காம்பொஸ் தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கிளீவ்லேன்ட் மருத்துவமனையில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தற்போது செய்யப்பட்டிருக்கும் இந்த சிக்கலான இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனையின் 100 வது உறுப்புமாற்று அறுவைசிகிச்சை இதுவாகும்.

உடல்பருமனைத் தோற்றுவிக்கும் டைப் 2 சர்க்கரை நோயைப்போல் அல்லாமல் உடலின் நோயெதிர்ப்பு சக்தி இன்சுலினை சுரக்கும் கணையத்தை தாக்குவதால் டைப் 1 சர்க்கரை நோய் ஏற்படுகிறது. பொதுவாக குழந்தைப் பருவத்திலேயே இந்த நோய்த்தாக்குதல் ஏற்படுகிறது. உலகளவில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 5 சதவிகிதத்தினர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“கணைய மாற்று அறுவைசிகிச்சை மிகவும் சிக்கலானது. அறுவை சிகிச்சைக்கு முன்னர் அதிக மதிப்பீடுகளை செய்யவேண்டியிருக்கும். பொதுவாக டைப் 1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்சுலினை எடுத்துக்கொள்வதன் மூலமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதேநேரத்தில் அவருக்கு சிறுநீரக பிரச்சினையும் ஏற்படுமானால் இம்மாதிரியான கணைய மாற்று அறுவைசிகிச்சையினால் சிறப்பான தீர்வைத் தர இயலும். இந்த சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழலாம்” என காம்பொஸ் தெரிவித்தார்.