UAE Tamil Web

அபுதாபி: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பயணம் செய்யும்போது வழங்கப்படும் சலுகைகள் பற்றித் தெரியுமா?

CORONA VACCINE

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கான சர்வதேச பயண, குவாரண்டைன் மற்றும் கொரோனா பாசிட்டிவ் நபர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கான புதிய விதிமுறைகளை அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.

- Advertisment -

அதன்படி, கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் பயண விதிமுறையில் இருந்து விலக்குப் பெற வாரமொருமுறை கொரோனா பரிசோதனை PCR எடுத்துக்கொள்ள வேண்டும்.

புதிய மாற்றம்

சரி, நீங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர் என்பதை எப்படி நிரூபிப்பது? சிம்பிள். ALHOSN அப்ளிகேஷன் இருக்கிறதல்லாவா? அதில் உங்களுடைய கணக்கினை பார்த்தாலே உங்களுக்கு பயண நடைமுறையில் விலக்கு கிடைக்குமா? என்பது தெளிவாகிவிடும்.

அதற்கு முன்னர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் இரண்டு வகைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். அதாவது, அபுதாபியில் நடைபெற்றுவரும் 3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி ஆய்வில் தன்னார்வலர்களாகச் சென்று தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் முதல் வகையினர். இவர்களுடைய ALHOSN அப்ளிகேஷன் கணக்கில் மஞ்சள் நிற நட்சத்திரம் ஒன்று மிளிரும். இதை நீங்கள் காண்பித்த உடனேயே உங்களுக்கு பயண நடைமுறையில் விலக்கு அளிக்கப்படும்.

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் மற்றும் PCR பரிசோதனை எடுத்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த மஞ்சள் நட்சத்திரம் காட்சியளிக்கும். அதுவும் ஒரு வாரத்திற்கு மட்டுமே. நட்சத்திரம் மறைந்த பிறகு நீங்கள் பயண விலக்கைப் பெற முடியாது.

என்ன செய்வது? நீங்கள் மீண்டும் PCR பரிசோதனை எடுத்தால் உங்களுடைய கணக்கில் மீண்டும் நட்சத்திரம் ஒளிரத் துவங்கும்.

மேற்கண்டவை எல்லாம் தன்னார்வலர்களுக்கு சொல்லப்பட்டவை. அப்படியென்றால் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் மூலமாக கொரோனா தடுப்பூசியை இலவசமாகப் பெற்றவர்களுக்கு?

அவர்களுடைய ALHOSN கணக்கில் நட்சத்திரத்திற்குப் பதிலாக வட்டமிடப்பட்ட E என்னும் எழுத்து திரையில் தோன்றும். இதற்கு நீங்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் மற்றும் 28 நாட்கள் கழித்து PCR பரிசோதனை எடுத்திருக்க வேண்டும். இதற்கும் ஒருவார ஆயுள் தான். அதன்பிறகு மறைந்துவிடும். விலக்குப் பெற விரும்புபவர்கள் மீண்டும் PCR எடுத்துக்கொள்ளவேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து அபுதாபி வருபவர்கள் கவனத்திற்கு:

அமீரக அரசால் கிரீன் நாடுகள் என வரையறுக்கப்பட்ட நாடுகளில் இருந்து அபுதாபி வருபவர்கள் விமான நிலையத்திலேயே PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அவர்கள் அபுதாபி வந்த 6 வது நாளில் மற்றொரு PCR சோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை.

அதென்ன கிரீன் நாடுகள்?

கிரீன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள்

  • ஆஸ்திரேலியா
  • புருனே
  • சீனா
  • கிரீஸ்
  • கிரீன்லாந்து
  • ஹாங்காங்
  • மலேசியா
  • மொரீஷியஸ்
  • நியூசிலாந்து
  • சவுதி அரேபியா
  • சிங்கப்பூர்
  • தைவான்
  • தஜிகிஸ்தான்
  • தாய்லாந்து
  • உஸ்பெகிஸ்தான்
  • வியட்நாம்

மேற்கண்ட நாடுகளைத் தவிர பிற நாடுகளில் இருந்து அபுதாபி வருவோர், அபுதாபி வந்தவுடன் ஒரு PCR பரிசோதனையும், 8-வது நாளில் மற்றொரு PCR பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் கண்டிப்பாக 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

பிற எமிரேட்களில் இருந்து அபுதாபி வருவோர் கவனத்திற்கு:

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நபர் ஒருவர் பிற எமிரேட்களில் இருந்து அபுதாபி வரும்போது 4 ஆம் நாள் மற்றும் 8 ஆம் நாளில் (8 நாட்கள் தொடர்ந்து தங்குபவராக இருப்பின்) கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, பயண நேரத்திற்கு முன்னதாக 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை (DPI அல்லது PCR) வைத்திருத்தல் அவசியம்.

ஆனால், பிற எமிரேட்களில் இருந்து அபுதாபி வருபவர்களுள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு ஆக்டிவ் ஐகானைப் (மேற்கண்ட மஞ்சள் நட்சத்திரம் அல்லது வட்டமிடப்பட்ட E எழுத்தை ALHOSN அப்ளிகேஷனில் வைத்திருப்பவர்களுக்கு) பெற்றிருப்பவர்களுக்கு மேற்கண்ட நடைமுறையில் விலக்கு அளிக்கப்படும்.

கொரோனா தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள்

தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஒருவர், கொரோனா நோயாளியுடன் நெருங்கிப் பழகியிருந்தால் அவர் ஐந்து நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் 4 ஆம் நாளில் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்களது பரிசோதனை நெகட்டிவ் என வரும்பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தலை நிறுத்திக்கொள்ளலாம்.

மேலே நீங்கள் படித்தது அனைத்தும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கான விதிமுறைகள் மட்டுமே. இந்தியாவிலிருந்து அமீரகம் வருவோருக்கான பொதுவான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

அதேபோல, அமீரகத்தின் பிற எமிரேட்டுகளில் இருந்து அபுதாபி வருவோருக்கான விதிமுறைகள் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

அமீரகத்தில் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கும் இடங்களின் முழுப் பட்டியலையும் காண இங்கே கிளிக் செய்யவும்.