செயற்கையாக உருவாக்கப்பட்ட அபுதாபி லகூன் பகுதியில் இன்று மிகவும் அரியவகை திமிங்கில சுறா ஒன்று சுற்றித் திரிவதை மக்கள் பார்த்து அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.
அபுதாபியின் அல் பாஹியா பகுதியில் உள்ள லகூனில் சிக்கிக்கொண்ட இந்த 6 மீட்டர் நீளமுள்ள சுறாவை அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரேபிய வளைகுடாவிற்கு எடுத்துச்செல்லும் முயற்சிகளை அதிகாரிகள் துரிதகதியில் மேற்கொண்டனர்.
When a 6m whale shark lost its way and became stranded in a lagoon in the Al Bahiyah area of #AbuDhabi, @EADTweets together with @Thenationalaq stepped in to perform a first-of-its kind procedure to relocate it back to the Arabian Gulf. pic.twitter.com/6wdytJjL40
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) December 6, 2020
வனவிலங்குகள் மீட்புக்குழு, சுற்றுச்சூழல் முகமை அதிகாரிகள் மற்றும் நேஷனல் அக்வேரியம்-ஐச் (National Aquarium) சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
சுறாவிற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அபுதாபி மரைன் கிளப்பைச் சேர்ந்த பணியாளர்கள் சுறாவை அரேபிய வளைகுடாவிற்கு அழைத்துச்சென்றார்கள். சுறாவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நடத்தப்பட்ட இந்த 5 மணிநேர போராட்டம் இறுதியில் வெற்றிபெற்றது.
அபுதாபி ஊடக அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” சுறாவின் உடம்பில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அதன் நடவடிக்கைகள் மற்றும் அதன் தன்மையை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொள்ளலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரேபிய வளைகுடாவில் மீண்டும் தனது பயணத்தைத் துவக்கிய இந்த சுறா 250 கிலோமீட்டர் சென்றுள்ளதாகவும், சுறா கூட்டங்களை நோக்கி அது சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மீட்பு நடவடிக்கைகளில் அமீரகம் முதன்முறை ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.