அபுதாபியில் நடத்தப்பட்ட ஹவுதி தாக்குதலில் பலியான அட்னாக் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைகள் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
அபுதாபியின் முஷாபா நகரில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 17 ஆம் தேதி டிரோன் தாக்குதல் நடத்தினர். அதில் அட்னாக் எண்ணெய் நிறுவனத்தின் ஊழியர்களான 2 இந்தியர்கள், 1 பாகிஸ்தான் நாட்டவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை அடுத்து அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் கூறுகையில், தாக்குதலில் பலியான இருவரின் குடும்பத்தினரும் துயரத்தில் உள்ளனர். இந்த குடும்பங்களுக்கு அமீரக இந்திய தூதரகம் தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறது. இறந்தவர்களி்ன் உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கான செலவுகளை அட்னாக் நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் அந்நிறுவனம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஊதிய இழப்பீடு வழங்கவும், குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளையும், இறந்தவர்களின் குழந்தைகளின் கல்விக்கான நிதியுதவிகளை வழங்கவுள்ளது. அதுமட்டுமின்றி காயமடைந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து மருத்துவ உதவிகளையும் அட்னாக் நிறுவனம் செய்து வருகிறது என்று இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.