fbpx
20.3 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

அமீரகத்திலிருந்து இந்தியாவிற்குச் செல்வோர் “ஏர் சுவிதா” போர்டலில் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என இந்திய அரசு அறிவிப்பு – எப்படி விண்ணப்பிப்பது?

INDIA-AIRPORT-CHENNAI-

வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்புவோர் கட்டாயமாக ஏர் சுவிதா என்னும் போர்டலில் பதிவு செய்திருக்கவேண்டும் என இந்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆகஸ்டு 8 முதல் இந்த சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது துபாயிலுள்ள இந்தியத் துணைத் தூதரகம். அதன்படி,

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் மக்கள் https://www.newdelhiairport.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தங்களுடைய வருகையைப் பதிவுசெய்ய வேண்டும். பதிவு செய்யும் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும். இந்த வசதியின் மூலமாக மக்கள் தங்களது சுய உறுதிமொழிப் படிவத்தை சமர்ப்பிக்க மற்றும் குவாரண்டைன் விதிமுறைகள் குறித்த நடைமுறைகளுக்காக நீண்டநேரம் விமான நிலையத்தில் நிற்கவேண்டிய அவசியம் இருக்காது.

ஏர் சுவிதா போர்டலில் பயணிகள் தங்களது சுய உறுதிமொழிப் படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும். மக்கள் தங்களது பாஸ்போர்ட் நகலை போர்டலில் பதிவேற்றம் செய்யவேண்டும். சுய உறுதிமொழிப் படிவத்தை பூர்த்தி செய்கையில் பயணிகள் தங்களது பயண விபரங்கள், இந்தியாவில் உள்ள தங்களது முகவரி மற்றும் போன் நம்பர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை அளிக்கவேண்டும்.

பயணிகள் தங்களது பயண நேரத்திற்கு முன்னதான 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் சமர்ப்பிக்க போர்டலில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. ஏர் சுவிதாவில் சமர்ப்பிக்கப்பட்ட பயணிகளின் விபரங்களை சுகாதார அதிகாரிகள் அங்கீகரிக்கும்பட்சத்தில் மக்கள் நேரடியாக தங்களது வீட்டில் தனிமைப்படுத்திகொள்ள அனுமதியளிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆகஸ்டு 8 – 11 ஆம் தேதிவரையில் போர்டலிலும், நேரடியாகவும் மக்கள் தங்களது சுய உறுதிமொழிப் படிவத்தை சமர்ப்பிக்கலாம். ஆகஸ்டு 11 ஆம் தேதிக்குப் பிறகு போர்டலில் மட்டுமே மக்கள் தங்களது சுய உறுதிமொழிப் படிவத்தை சமர்ப்பிக்க முடியும்.

பயணிகள் தங்களது விமான மற்றும் சுய உறுதிமொழிப் படிவத்தை தகுந்த தகவல்களுடன் பூர்த்தி செய்ய வேண்டும். பிரயாணிகளுக்கு ஒப்புதல் மின்னஞ்சலுடன் பிரத்யேக குறிப்பு எண் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தின் நகல் அளிக்கப்படும்.

பயணிகள் தங்களது வருகையின்போது தங்களுக்கு வந்த ஒப்புதல் மின்னஞ்சலை (டிஜிட்டல் அல்லது பிரிண்ட் எடுத்து) விமான நிலையத்தில் உள்ள சுகாதார அலுவலகத்தில்(APHO) காண்பிக்கவேண்டும். டிஜிட்டல் பதிவு நிறைவுபெற்றதை குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக போர்டிங் பாஸில் APHO அதிகாரிகள் முத்திரை குத்துவார்கள். அடுத்ததாக, குடியேற்றத்துறை நடைமுறைகளை பயணிகள் மேற்கொள்வார்கள். அங்கே எவ்வித உறுதிமொழிப் படிவத்தையும் பயணிகள் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்னர் PCR பரிசோதனை எடுத்துக்கொண்டால் அதனையும் இதே போர்டலில் பயணிகள் (விரும்பினால்) சமர்ப்பிக்கலாம்.

அனைத்து பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் இந்த பதிவு செய்தல்/சுய உறுதிமொழிப் படிவத்தை சமர்ப்பிக்கும் நடைமுறைகளை இந்தியா செல்லும் பயணிகளுக்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை வைத்திருக்கிறது துணைத் தூதரகம்.



error: Alert: Content is protected !!