UAE Tamil Web

அபுதாபி: மாதக்கணக்கில் பசியுடன் பூங்காவில் தங்கியிருந்த தமிழக இளைஞரை தாயகத்திற்கு அனுப்பிவைத்த அய்மான் சங்கம்..!

aiman

கையில் பணமில்லாமலும் உடுத்த போதிய துணி இல்லாமலும் அபுதாபியின் பூங்கா ஒன்றில் வசித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்தவரை மீண்டும் தாயகத்திற்கு அனுப்பிவைத்திருக்கிறது அபுதாபியைச் சேர்ந்த அய்மான் சங்கம். அமீரக வாழ் தமிழர்களின் துயர்துடைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் இந்த சங்கத்தின் நிர்வாகிகளுக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

உணவு, உடை இல்லாமல் அபுதாபியின் பூங்கா ஒன்றில் ஷேக் தாவூத் என்னும் தமிழர் ஒருவர் கஷ்டப்பட்டு வருவதாகவும் அவருக்கு உதவ முடியுமா? என அய்மான் பைத்துல்மால் செயலாளர் நிஜாம் மைதீன் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அய்மான் சங்கத்தினைச் சேர்ந்த உறுப்பினர்கள் பூங்காவிற்கு நேரில் சென்று, தமிழகத்தைச் சேர்ந்த நபரை சந்தித்திருக்கின்றனர்.

பாஸ்போர்ட் நகலை மட்டுமே வைத்திருந்த ஷேக், கொரோனா காரணமாக கடந்தாண்டு ஜூலை மாதம் பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டு சொற்ப வருமானத்தில் உயிர்பிழைத்துக் கொண்டிருந்த தனக்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் இந்த நிலைமைக்கு வந்துவிட்டதாக கண்ணீர் சிந்தியிருக்கிறார்.

உடனடியாக அவரை தாயகம் அனுப்புவதற்கு வேண்டிய பணியில் அய்மான் சங்கம் இறங்கியது. விசா முடிந்து கிட்டத்தட்ட 8 மாத காலம் தங்கியிருந்த அவருக்கு அமீரக அரசு கருணைகாட்ட, சிறைத்தண்டனை மற்றும் ஓவர்ஸ்டே அபராதம் ஆகியவற்றிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கிறது.

லட்சக்கணக்கிலான அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டதும் தாயகம் திரும்புவதற்கு வேண்டிய பயண நடைமுறைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டது. விமான டிக்கெட், கொரோனா பரிசோதனைகள் ஆகியவற்றிற்கான செலவுகளை தூதரகமே ஏற்றிருக்கிறது. அத்தனை தடைகளையும் மீறி ஷேக் தாவூத் கடந்த 7 ஆம் தேதி, தமிழகம் சென்றிருக்கிறார்.

பணமும், இருப்பிடமும், உடையும் இல்லாமல் தவித்துவந்த தமிழருக்கு உதவிய அய்மான் சங்கத்திற்கு அமீரக வாழ் தமிழ் மக்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.