UAE Tamil Web

தலையில் புற்றுநோய் கட்டியுடன் உயிருக்குப் போராடிய ஏழைச் சிறுமி ; முழு செலவையும் ஏற்றதுடன் வீடு ஒன்றையும் பரிசளித்த அமீரக ஆட்சியாளர்..!

ruler ajman

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்ற வரலாற்று வரிகளுக்கு தனது செயலால் தங்கமுலாம் பூசியிருக்கிறார் உச்ச சபையின் உறுப்பினரும் அஜ்மானின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி.

மொராக்கோ நாட்டில் தலையில் புற்றுநோய்க்கட்டியுடன் ஏழைச் சிறுமி ஒருவர் அவதிப்பட்டுவருவதாக அஜ்மான் ஆட்சியாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரமலான் நேரம் அது. தனது தனிச் செயலாளர் ஹமாத் பின் கலிதா அல் காஃப்லி -யை அழைத்தார் ஆட்சியாளர். உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய ஆட்சியாளர் தெரிவிக்கவே, மொரோக்கா நாட்டின் ராபாத் பகுதியில் உள்ள ஷேக் சயீத் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டாள்.

ஏழு மணிநேரம் நீடித்த அறுவை சிகிச்சை, சிறுமிக்கு புதுவாழ்வை அளித்திருக்கிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் அஜ்மான் ஆட்சியாளர் ஏற்றிருக்கிறார். சமீபத்தில் மொரோக்கோ நாட்டிற்கு அரசுமுறைப் பயணமாக அஜ்மான் ஆட்சியாளர் சென்றிருந்தார்.

அப்போது தங்களது குழந்தையைக் காப்பாற்றியதற்காக சிறுமியின் பெற்றோர் ஆட்சியாளரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அவர்களது வறுமை நிலையை அறிந்த ஆட்சியாளர் சிறுமியின் குடும்பத்திற்கு வீடு ஒன்றினையும் வாங்கித்தர உத்தரவிட்டிருக்கிறார். இதனால் இன்ப அதிர்ச்சியில் அந்தக் குடும்பம் திகைத்துபோயிருக்கிறது.

தன்னுடைய ஆட்சிப் பரப்பை சார்ந்தவர் இல்லை எனினும் வறுமையின் பிடியில் தவித்த சிறுமியை தன்னுடைய தாராளக் கைகளால் அணைத்த அஜ்மான் ஆட்சியாளருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.

ruler ajman
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap