UAE Tamil Web

அஜ்மானில் மக்களின் வசதிக்காக புதிய பேருந்து வழித்தடங்கள் அறிமுகம்..!

bus

அஜ்மானில் பேருந்து சேவையை மேம்படுத்துவதற்காக புதிய பேருந்து வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நான்கு மொழிகள் கொண்ட ஸ்மார்ட் அப்ளிகேஷன் ஒன்றையும் அஜ்மான் போக்குவரத்து ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

- Advertisment -

2021 விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக அஜ்மான் போக்குவரத்து ஆணையம் புதிய பேருந்து வழித்தடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய பேருந்து வழித்தடமானது அல் முசல்லா பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி நுவைமியா வழியாக ஷேக் அம்மர் தெரு வரை செல்கிறது. இந்த சேவையானது ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை என காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை இயங்கும் என்று அஜ்மான் போக்குவரத்து ஆணையம் (ATA) தெரிவித்துள்ளது .

இதுகுறித்து போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனர் ஜெனரல் ஒமர் பின் ஒமெய்ர் அல் முஹைரி கூறுகையில், “இந்த புதிய பேருந்து வழித்தடத்தில் மொத்தம் 11 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. பேருந்து பயண முன்பதிவிற்கு ஸ்மார்ட் அப்ளிகேஷன்ஸ் மூலமாகவும், ஆன்லைன் சேவைகள் மூலமாகவும் பதிவு செய்யலாம். அதுமட்டுமின்றி ஆன்லைன் முன்பதிவை எளிமையாக்குவதற்காக அரபிக், ஆங்கிலம், உருது மற்றும் சீன மொழி ஆகியவை இந்த ஸ்மார்ட் அப்ளிகேசனில் இடம்பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

புதிதாக 10 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும், அதில் மொபைல் சார்ஜர் வசதி, வைஃபை (wifi) வசதி மற்றும் உள் காட்சித் திரைகள்(internal display screens) போன்றவை இடம் பெற்றுள்ளதாகவும், இந்த புதிய டிஜிட்டல் சேவைகள் மூலம் 95 விழுக்காடு பயணிகள் திருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் மஸார் (Masar) அப்ளிகேசன் மூலமாகவோ, ta.gov.ae என்ற வெப்சைட் மூலமாகவோ அல்லது இதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் 600599997 வாட்ஸ்அப் எண் மூலமாகவோ பயணிகள் பயண நேரங்கள் குறித்த தங்களின் சந்தேகங்களைத் தீர்த்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

அதிகரித்துவரும் பொதுப் பேருந்து சேவைகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், அஜ்மானின் பேருந்து வழித்தடங்களை வலுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது மூலம் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மாசுபாடு குறையும் என்று அல் முஹைரி கூறினார்.