UAE Tamil Web

வெடித்துச்சிதறிய கேஸ் சிலிண்டர் : இரு இந்தியர்கள் படுகாயம்..!

Gas-Cylinder-blast

அஜ்மானின் அல் ஹமிதியா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த சனிக்கிழமை கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்துச் சிதறியிருக்கிறது. சமையலறையில் ஏற்பட்ட இந்த விபத்தினால் வீடு கடும் சேதமடைந்திருக்கிறது.

காவல்துறையினரும் மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்த நேரத்தில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் தங்கியிருந்த 2 இந்தியர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு ஷார்ஜாவில் உள்ள அல் காசிமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுள் 21 வயதான இந்திய இளைஞர் லேசான காயத்துடன் தப்பியதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். இருப்பினும் மற்றொரு இந்தியருக்கு (37) இடதுகை மற்றும் கால்களில் இரண்டாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனைமுன்னிட்டு அவருக்கு 2 அறுவைசிகிச்சைகள் நடைபெற்றிருக்கின்றன. அவருடைய உடல்நிலை தேறும் வரையில் அவர் மருத்துவமனையிலேயே இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

எரிவாயு சிலிண்டர்களை சேமிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அஜ்மான் சிவில் பாதுகாப்புத் துறை குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது. இந்த சிலிண்டர்களை நேரடி சூரிய ஒளி அல்லது வெப்பம் படும் பகுதிகளில் இருந்து விலக்கி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலிண்டர்களின் புற அமைப்பு மற்றும் கசிவுகளுக்கான வழக்கமான சோதனைகளும் முக்கியமானவை. மேலும், சிலிண்டர்களை எப்போதும் நேரான நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் நன்கு காற்றோட்டமுள்ள மூடப்பட்ட அறைகளில் சிலிண்டர்களை வைக்க வேண்டும் எனவும் சிவில் பாதுகாப்புத்துறை மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Gas-Cylinder-blast
0 Shares
Share via
Copy link