UAE Tamil Web

வீட்டிற்குச்செல்ல வழியை மறந்த முதியவர் : அடைக்கலம் கொடுத்து மீண்டும் குடும்பத்துடன் இணைத்துவைத்த அமீரக காவல்துறை..!

Ajman Police

அஜ்மான்: அல் நுவைமியா பகுதியில் தனது வீட்டிற்குச் செல்ல வழியை மறந்துவிட்டு தவித்த முதியவருக்கு அஜ்மான் காவல்துறை உதவி செய்து மீண்டும் அவரது குடும்பத்தாருடன் இணைத்து வைத்திருக்கிறது.

- Advertisment -

இதுகுறித்துப் பேசிய அல் நுவைமியா காவல் நிலையத்தின் தலைமை இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் யாஹ்யா கலாஃப் அல் மட்ரோஷி,” ரோந்துப் பணிகளின் போது வயதானவரைப் பார்த்தோம். அவருக்கு தனது வீட்டிற்குச் செல்வதற்கான வழி தெரியவில்லை. உடனடியாக அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து உணவு அளித்தோம். அதன்பின்னர் அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடித்து விபரத்தை எடுத்துக்கூறினோம். உடனடியாக அவர்கள் வந்து முதியவரை அழைத்துச் சென்றார்கள்” என்றார்.

முதியவரின் குடும்பத்தினர் அஜ்மான் காவல்துறைக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர். வீட்டில் உள்ள முதியவர்களை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு அல் மட்ரோஷி பொதுமக்களை வலியுறுத்தினார்.

முதியவரின் மகன்களில் ஒருவர் பேசுகையில்,” எனது தந்தைக்கு தற்போது 80 வயதாகிறது. அதன் காரணமாக அவருக்கு ஞாபகங்கள் சில நேரங்களில் மறந்துபோகின்றன. அவருக்கு வீட்டில் பொழுது போகாமல் இருந்ததால் காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பியபோதுதான் இந்தப் பிரச்சினை வந்தது” என்றார்.

“அவருடைய அறையில் அவர் உறங்குவதாக நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். அவர் வீட்டைவிட்டு வெளியேறுவதை நாங்கள் யாரும் கவனிக்கவில்லை” என முதியவரின் மகன் குறிப்பிட்டார்.