UAE Tamil Web

மகனைப் பார்க்கும் ஆசையில் தவறுதலாக அமீரகத்திற்கு வந்த தாய் – பத்திரமாக தாயகத்திற்கு அனுப்பிவைத்த அமீரக காவல்துறை..!

police help

அரபு நாடுகளில் ஒன்றினைச் சேர்ந்த அந்தப் பெண் அமீரக விமான நிலையத்தில் வந்து இறங்கிய பின்னர் திக்கென்று இருந்திருக்கிறது. காரணம் அவர் வந்திருக்க வேண்டியது அமீரகத்திற்கு அல்ல.

- Advertisment -

தன்னுடைய தாய்நாட்டிற்கு அருகில் இருக்கும் மற்றொரு நாட்டில் வசிக்கும் தன் மகனைப் பார்க்க உதவி செய்யுமாறு, தனது சொந்த நாட்டில் இருக்கும் ஒருவரிடம் அந்தத் தாய் கேட்டிருக்கிறார். உதவ முன்வந்த அந்த நயவஞ்சகர் அந்தத் தாயின் மகன் இருக்கும் நாட்டிற்கு அல்லாமல் அமீரகத்திற்குச் செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

மகனைப் பார்க்கும் ஆசையில் விமானம் ஏறிய அந்தப் பெண், அமீரகம் வந்த பிறகே தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்திருக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அவர் அல் ஹமிதியா காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு உதவும்படி கேட்டுள்ளார்.

பெண்மணியின் எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டை ஆராய்ந்த காவல்துறை, பெண்ணுடைய தாய்நாட்டில் இருக்கும் அவரது மகன்களில் ஒருவரை போன் மூலமாக அழைத்து, பேசியிருக்கின்றனர். அப்படித்தான் இந்தப் பெண்மணி தவறுதலாக அமீரகம் வந்தது காவல்துறைக்கு தெரியவந்திருக்கிறது.

அல் ஹமிதியா காவல்நிலையத்தின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் யாஹ்யா கலாஃப் அல் மட்ரோஷி (Yahya Khalaf Al-Matroushi) உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, அந்தப் பெண்ணிற்கு தேவையான உதவிகளை செய்திருக்கிறார்.

சுற்றுலாத் துறைக்கு தகவல் அளித்த மட்ரோஷி, உடனடியாக அந்தப் பெண்ணிற்கு விசா மற்றும் விமான டிக்கெட்டை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தப் பணிகள் முடிவடைய 4 நாட்கள் ஆகும் எனத் தெரிந்தவுடனேயே அந்தப் பெண் தங்க பாதுகாப்பான இடத்தினையும் அவருக்கான உணவையும் வழங்க மட்ரோஷி உதவியுள்ளார்.

பாதுகாப்பாக அந்தப் பெண் தனது தாயகத்திற்குச் சென்றுவிட்டார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்தார் என்பதையும் அஜ்மான் காவல்துறை உறுதி செய்திருக்கிறது.

தன்னை மீண்டும் தாயகத்திற்கு அனுப்ப தேவையான முயற்சிகளை மேற்கொண்ட அஜ்மான் காவல்துறையினருக்கு தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்திருக்கிறார் அந்தப் பெண்.